மலேசியாவில் தஞ்சமடைய முயன்ற ரோஹிங்கியா அகதிகளுக்கு மியான்மரில் சிறைத்தண்டனை

மலேசியாவுக்கு முறையான ஆவணங்களின்றி செல்ல முயன்றதாக மியான்மரில் கைது செய்யப்பட்ட குழந்தைகள் உட்பட 112 ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

மியான்மர் நாட்டு அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியின் படி, கடந்த டிசம்பர் மாதம் மியான்மரின் தெற்கு ஐராவதி (Ayeyarwady) பகுதியில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு கடந்த ஜனவரி 6ம் திகதி தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் ரோஹிங்கியா மக்களை இழிவுபடுத்தும் விதத்தில் அரசுத்தரப்பு வழக்கமாக பயன்படுத்தும் ‘பெங்காலிகள்’ (வந்தேறிகள் என்ற அர்த்தத்தில்) என்னும் சொல்லைக் கொண்டு அரசு ஊடகத்தின் செய்தியில் ரோஹிங்கியாக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

1982 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட மியான்மர் குடியுரிமைச் சட்டத்தின் படி, ரோஹிங்கியாக்கள் நாடற்றவர்களாக மாற்றப்பட்டனர். இவர்களுக்கு தொடர்ந்து குடியுரிமை மறுக்கப்படுவது மட்டுமின்றி வேறு இடங்களுக்கு பயணிப்பதற்கு அனுமதி பெற வேண்டிய நிலையும் உள்ளது.

மியான்மரில் பல்வேறு விதமான அரசு/இராணுவ அடக்குமுறைகள் மற்றும் வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் ரோஹிங்கியா மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வங்கதேசம், மலேசியா, இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் தஞ்சம் கோருவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2017 ம் ஆண்டு சுமார் 7 இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் மியான்மரிலிருந்து அகதிகளாக வெளியேறியது பெரும் புலம்பெயர்வு நிகழ்வாக இருந்தது.

ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் கூற்றுப்படி, சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் படகு வழியாக வேறு நாடுகளில் தஞ்சமடையும் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு இருக்கின்றனர்.