தமிழர்களின் அரசியல் போராட்டம் வெற்றியடைய பேராதரவு தாருங்கள் – சென்னையில் சுமந்திரன் கோரிக்கை

152 Views

Image

75வருடகால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளியை இந்த ஆண்டு ஏற்படுத்துவதற்காக முயன்று வருகின்றோம். அவ்வாறான நிலையில் எங்களது அரசியல் போராட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு-சென்னை கலைவாணர் அரங்கில் இடம்பெற்ற அயலக தமிழர் தின நிகழ்வில் வியாழக்கிழமை (12) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

அயலக தமிழர் தின நிகழ்வானது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. விசேடமாக, நலிந்து, மெலிந்து இருக்கின்ற இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எழுச்சியைக் கொடுத்திருக்கின்றது.

எமக்கு ஒன்றென்றால் வெறும் முப்பது கிலோமீற்றர்கள் தொலைவிலே உள்ள தமிழகத்தில் எமது அண்ணன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையுடனும், பெருமையுடனும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இலங்கையில் தமிழர்கள் அல்லல்பட்ட தருணங்களில் எல்லாம் தமிழகத்தில் முத்துவேல் கருணாநிதி ஐயா அவர்களே குரல்கொடுத்தார்.

அதனை நாம் என்றுமே மறக்கப்போவதில்லை. அதுபோலவே, அண்மையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட் இலங்கைக்கு மூன்று கப்பல்களிலே உலருணவுப்பொதிகளை தமிழர்கள் வாரி அளித்து அனுப்பியிருந்தமையை என்றைக்கும் நாம் மறக்க மாட்டோம். முதலமைச்சர் ஸ்டாலின் எமக்களித்த உதவிக்கு நாம் என்றென்றும் நன்றி மறவாது இருப்போம்.

தலைநிமிர்ந்து நிற்பதற்காக நாம் ஆயுதங்களை ஏந்திக்கூடப்போராடினோம். எனினும் எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் சாத்வீகப்போராட்டங்கள் ஊடாக அதனை அடைவோம் என்ற உறுதியோடு இருக்கின்றோம்.

அவ்வாறான நிலையில் தமிழ்நாடு ஏற்பாடு செய்துள்ள இந்தமாநாட்டின் ஊடாக தமிழ்நாடும் ஏனைய தமிழ் சொந்தங்களும் அதற்கான ஆதரவுடன் இன்றும் இருக்கின்றது என்பது உறுதியாகியுள்ளது.

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வாதற்கான புதிய ஜனாதிபதியுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம். அந்தப்பேச்சுவார்த்தையில் தளர்வுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் நான் இம்மாநாட்டிற்கு வருகை தருவதற்கு முதன்நாள் கூட நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இணங்கிய விடயங்களை செயற்படுத்துமாறு ஒருவாரகால அவகாசம் அளித்துள்ளோம்.

இவ்வாறான நிலையில் எங்களுடைய அரசியல் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்மென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணனிடத்திலும், ஏனைய நாடுகளின் தலைவர்களிடத்திலும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Leave a Reply