மன்னாரில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று

IMG 20210805 102548 மன்னாரில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளோடு அவசர கலந்துரையாடல் ஒன்றை மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் நடத்தியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் மன்னர் மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரி பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை நகர சபை பிரதிநிதிகள், வலய கல்வி அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ருந்தனர்.

இந்த கூட்டத்தில் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல்  கருத்து தெரிவிக்கையில்

“மன்னார் மாவட்டத்தில் அனைவரினதும்  ஒத்துழைப்போடு கொரோனா தொற்றினை  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் தற்போது மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று  சடுதியாக உயர்ந்து வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது.

இதனால்  பொது மக்கள் மீண்டும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப் பிடிக்கச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.

துறை சார்ந்த அதிகாரிகள் இது விடயமாக கவனம் செலுத்த வேண்டும் என்றும்  குறிப்பாக பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற விடயங்கள் அவதானிக்கப் பட்டு அதற்குரிய தண்டனைகளை விதிப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. முக கவசங்களை உரிய முறையில் அணிதல் தொற்று நீக்கிகளால் கைகளை கழுவுவது  போன்ற செயற்பாடுகள் தொடர்ந்து அவதானிக்கப் படவுள்ளது.

மேலும் பொது போக்குவரத்துகளில் இருக்கைகளின் அளவுக்கு மாத்திரமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்து பொறுப்பானவர்களிடம் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக பிரதேச சபை, நகர சபையினர் அதிகூடிய கவனம் எடுக்குமாறும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021