‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்ற தொனிப்பொருளிலான மலையக மக்களின் எழுச்சிப் பயணத்தின் நான்காவது நாளான இன்று திங்கட்கிழமை (31) மன்னார் நகரில் ஆரம்பமான நடைபவனி முருங்கனை நோக்கி செல்கிறது.
இந்நடைபவனி மன்னார் நகரிலிருந்து 26 கிலோ மீற்றர் தூரத்தை கடந்து மாலை வேளையில் முருங்கனை சென்றடையும் என கூறப்படுகிறது.
மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டதை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடைபவனியின் நான்காம் நாள் பயணம் இன்று திங்கட்கிழமை மன்னாரிலிருந்து முருங்கனை நோக்கி நகர்கிறது.
மலையக மக்களின் ஒன்றிணைந்த கொள்கையை பிரதிபலிக்கும் விதமாகவும் மலையக சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும் நடைபெற்றுவரும் இந்த நடைபவனி நிகழ்வு மலையக மக்கள் கூட்டிணைவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 16 நாள் தொடர் நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை (28) தலைமன்னாரில் உள்ள புனித லோரன்ஸ் திருத்தல வளாக அரங்கில் நடைபெற்று, மறுநாள் சனிக்கிழமை (29) காலை திருத்தலத்திலிருந்து நடைபவனி புறப்பட தொடங்கியது.
இந்த நடைபவனி 16ஆம் நாளான ஓகஸ்ட் 12ஆம் திகதி மாத்தளையில் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.