ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான மீளப்பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வினை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி சதுக்கத்தில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கான மீளப்பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வினை வழங்குமாறு வலியுறுத்தும் வகையில் கடந்த ஆண்டு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுவந்த 100நாள் போராட்டம் நடைபெற்று ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் வி.லவகுசராசா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்துகாணாமல் ஆக்கப்ப்ட்டவர்களின் உறவினர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
வடகிழக்கில் தமிழ் பேசும் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகியுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்ககூடிய ஒரு நிவாரண தீர்வாக அரசியல் தீர்வாக சமஸ்டி ரீதியான ஆட்சியை தமிழ் பேசும் மக்கள் வேண்டி நிற்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் வடகிழக்கு தீர்வினை வழங்கப்போவதாக ஜனாதிபதி அவர்கள் பல்வேறு கூட்டங்களை நடாத்துகின்ற போதிலும் இதுவரையில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாத நிலை காணப்படுவதாகவும் ஜனாதிபதியின் இந்த செயற்பாடு சர்வதேசத்தினையும் தமிழ் பேசும் மக்களையும் ஏமாற்றும் வகையில் உள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.