மாகாணசபைத் தேர்தல் ? – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் முக்கிய தகவல்!

எல்லை நிர்ணய மீளாய்வு குழு  இரண்டு மாதங்களுக்குள் மீளாய்வு அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்திருந்தால் மாகாணசபைத்   தேர்தல் சட்டத்தில் சட்ட சிக்கல் ஏற்பட்டிருக்காது.இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பற்கு கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள்  தோல்வியடைந்தன. சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை. புதிய  விசேட பாராளுமன்ற செயற்குழு விரைவாக தீர்வு வழங்கினால் மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் தெரிவித்ததாவது,

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் கடந்தவாரம் முன்னிலையாகி மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கல்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்  குறித்து விடயங்களை முன்வைத்தோம்.

மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொகுதி  எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படவில்லை.

தொகுதி எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறைகள் இல்லாத காரணத்தால் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பதில் பிரச்சினை காணப்படுகிறது.இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பற்கு கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள்  தோல்வியடைந்தன. சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை.

எல்லை நிர்ணய அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால்  குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கையாக சபாநாயகரினால் பிரதமரின் தலைமையில் ஐவரைக் கொண்ட மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றபோதும்,  அவ்வாறானதொரு அறிக்கை இன்றுவரை  கையளிக்கப்படவில்லை.

இவ்வாறான காரணிகளால் மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்ற பிரச்சினை காணப்படுகிறது.இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள விசேட செயங்குழுவில் முன்னிலையாகி இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளோம்.

பாராளுமன்ற செயற்குழு சகல தரப்புகளுடளுடம் கலந்துரையாடி முரண்பாடற்ற வகையில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். குழு நியமிக்கப்பட்டு 03 மாத காலத்துக்குள் விதப்புரை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட செயற்குழு விதப்புரை அறிக்கை சமர்ப்பித்தவுடன் அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தில் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் எட்டப்படும்.இதன் பின்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைளை சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்வோம்.