இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அறிவித்து வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (04) எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்கமைய, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் மற்றும் பேரணி என்பன முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி கிளிநொச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனியினால், சுதந்திர தினம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.
இதன்படி, ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பௌத்த மயமாக்கல் உடனே நிறுத்தப்பட வேண்டும். தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் நில அபகரிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும்.

தாயக வளத்தை அபகரிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து உடனடியாக இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.  தமிழின படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.

அத்துடன், கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (04) மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செங்கலடி சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்; சங்கத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.

இதனிடையே, சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டிந்தனர்.

அத்துடன், யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.
இதேவேளை, இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று (04)கருப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.