கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு வெளிநாட்டு பெண்ணும் உயிரிழந்தார்.
ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு வந்த மூன்று வெளிநாட்டவர்கள் கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டி மெல் வீதியில் உள்ள விடுதியொன்றில் கடந்த 30ஆம் திகதி முதல் தங்கியிருந்தனர். அவர்களில் 30 வயதுடைய ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவரும், 27 வயதுடைய அவரது மனைவியும் 24 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவரும் இவ்வாறு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெளிநாட்டவர்கள் மூவரும் அந்த விடுதியின் 3ஆவது மாடியில் உள்ள அறையொன்றில் தங்கியிருந்த நிலையில், கடந்த 31ஆம் திகதி அவர்களுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டது. அவர்களின் உடல் நிலைமை மோசமடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டனர்
இந்தநிலையில், அவர்களில் 24 வயதுடைய பிரித்தானிய பெண் சிகிச்சை பலனின்றி முன்னதாக உயிரிழந்தார். அவரது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இருவரில் 27 வயதான ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார்.
இதனிடையே குறித்த வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த அறைக்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன், குறித்த அறை முத்திரையிடப்பட்டுள்ளது. அந்த அறைக்கு பூச்சிகளை கட்டுப்படுத்தும் ஒருவகையான வாயு விசிறப்பட்டுள்ளது.’குறித்த வாயுவைப் பயன்படுத்திய பிறகு, அந்த அறை 72 மணிநேரம் மூடப்பட்டிருக்க வேண்டும்’ என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் ‘குறித்த மூன்று வெளிநாட்டவர்களும்; அந்த வாயுவை சுவாசித்ததன் விளைவாக நோய்வாய்ப்பட்டிருக்கலாம்’ என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் வெளியாகாத நிலையில், உணவு விஷமானதால் குறித்த மரணங்கள் ஏற்பட்டதா? என்பது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, குறித்த மூன்று வெளிநாட்டவர்களும் உணவருந்திய உணவகத்தையும் பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.