இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

01. இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றன.

‘தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதேவேளை, நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மதியம் இலங்கை கடற்படையினரால் மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டன.

இதன்படி, காலி முகத்திடலை அண்மித்த கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள சயுர கப்பலில்; இருந்து 25 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வழமையை போன்று குதிரைப்படை அல்லது ஏனைய துணை வாகனங்கள் போன்ற பரிவாரங்கள் இம்முறை சுதந்திர தின நிகழ்வில் பயன்படுத்தப்படவில்லை.

ஜனாதிபதியின் வருகையை தொடர்ந்து சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின.
சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஆரம்ப நிகழ்வாக ஜனாதிபதியினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதன் பின்னர் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன்பின்னர், சுதந்திரத்துக்காக உயிர்நீத்த அனைவருக்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு முப்படைகளின் மரியாதை அளிக்கப்பட்டது.

அதன் பின்னர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சுதந்திர தின உரை இடம்பெற்றது.
ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணி வகுப்பு இடம்பெற்றது.

இம்முறை எந்தவகையான இராணுவ கவச வாகனங்களும் சுதந்திர தின நிகழ்வில் பயன்படுத்தப்படவில்லை.
அத்துடன், வழமையை விடவும் குறைந்த எண்ணிக்கையிலான இராணுவத்தினரே பயன்படுத்தப்பட்டிருந்தனர்.
இலங்கையின் 77 ஆவது சுதந்திர நிகழ்வின் நிறைவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது.

இந்த இரத்ததான முகாமில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதனிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் வரையில் தேசிய கொடிகளை ஏந்தியவாறு பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருகோணமலை நகருக்கு மத்தியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, உணவுப் பொதிகள் வழங்கும்; நிகழ்வு இடம்பெற்றுள்ளது.