பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கான ஒரு முயற்சி

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு முன்மொழியப்பட்ட

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே தோன்றுகின்றது என மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

 இது குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளதாவது

‘2022 ஜனவரி 24 ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து இங்கு ஆராயப்படுகின்றது. மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் முன்மொழியப்பட்டதிருத்தங்களிற்கான ஆரம்பகட்ட கருத்தாக இதனை உருவாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மேலதிக பரப்புரைகள் இடம்பெறும். உத்தேச திருத்தங்கள் குறைந்தபட்ச அணுகுமுறையையே பின்பற்றியுள்ளன-யதார்த்தத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு போதுமானவையாக இல்லாத அடிப்படை சீர்திருத்தங்களையே முன்வைத்துள்ளன என்பதை ஆரம்பத்தில் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சுட்டிக்காட்டவிரும்புகின்றது.

சட்டதுறை நிபுணர்கள்-சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் – இலங்கை உச்சநீதிமன்றம் உட்பட பல தரப்பினர் சுட்டிக்காட்டிய சீர்திருத்தம் அவசரமாக தேவைப்படும் பல அம்சங்கள் குறித்து, உத்தேச சட்ட மூலம் கவனம் செலுத்தவில்லை. இதனடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே தோன்றுகின்றது.

மாறாக பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இடம்பெறும் துஸ்பிரயோகங்கள் மீறல்கள் ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியாக இது தோன்றவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து மாற்றுக்கொள்கை நிலையமும் ஏனைய தரப்பினரும் வெளியிட்ட பல கரிசனைகளிற்கு உத்தேசதிருத்தில் தீர்வு.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அறிக்கைகள் மற்றும் ஒப்புதல்கள் குறித்த பிரச்சினைகளிற்கு தீர்வு காணப்படவில்லை. சந்தேகநபர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெறும்போது பின்பற்றப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவரை 72 மணித்தியாலங்கள் நீதிமன்றத்தில் ஆஜராக்காமல்வைத்திருக்கலாம் என்பதில் எந்த திருத்தங்களும் செய்யப்படவில்லை.

இது பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ள பலவீனமாகும்- இது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும்வேளை சித்திரவதை செய்யப்படும் நிலையை உருவாக்கியுள்ளது.

விசாரணையின் போது நீதித்துறையின் போதிய கண்காணிப்பு இன்மை என்ற விடயத்திற்கு உத்தேச திருத்தம் தீர்வை முன்வைக்கவில்லை. சந்தேகநபர்களை தாங்கள் விரும்பிய இடங்களிற்கு அழைத்து செல்வதற்கான அதிகாரம் உட்படவிசாரணை அதிகாரிகளிற்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கதிகமான அதிகாரங்கள் கைதுசெய்யப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுவதற்கும் வழிவகுததுள்ளன.

பலர் விசாரணைக்காக சிறைச்சாலைக்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்ற போது சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாதம் என கருதப்படக்கூடிய குற்றங்கள் எவை என்பது குறித்த வரைவிலக்கணம் பரந்துபட்டதாகவும் தெளிவற்றதாகவும் காணப்படுகின்றது.
மேலும் தேவைப்படாத சந்தர்ப்பங்களில் கூட பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு அது அனுமதியளித்துள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களில் இது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.
சட்டத்தரணியை சந்திப்பதற்கான உரிமை ஏற்கனவே சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளது- ஆனால் வெளியாகியுள்ள திருத்தங்கள் இந்த உரிமையை உறுதி செய்யவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் பலர் பல சிரமங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளனர் குறிப்பாக சட்டத்தரணிகளை அமர்த்துவதில் அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும் சந்தேகநபரின் உரிமைகள் குறித்த தகவல்களை கைதுசெய்யும்போது வழங்குவதற்கான ஏற்பாடுகள் எதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் இல்லை.

சட்டங்களை இயற்றுவதற்கான பரந்துபட்ட அதிகாரங்களை பயங்கரவாத தடைச்சட்டம் அமைச்சருக்கு வழங்கியுள்ளது. மேலும் இந்த ஏற்பாடுகளின் கீழ் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களிற்கு வழிவகுக்க கூடிய சட்டங்கள் உருவாக்கப்படுவதற்கு இது காரணமாக அமைந்துள்ளது. திருத்தங்கள் இந்த விடயத்திற்கு தீர்வை காணதவறியுள்ளன

Tamil News