ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில் புரட்சியொன்றை ஏற்படுத்திய ஒரு முக்கிய தேர்தலாகும். ஸ்திரமான ஆட்சியொன்றை ஏற்படுத்துவதற்காக 2/3 அதிகாரத்தை பெற்றுத் தருமாறு நாம் மக்களிடம் கேட்டிருந்தோம்.
வரலாற்றில் முதற் தடவையாக விகிதாசார முறைமையின் கீழ் இடம்பெற்ற தேர்தல் ஒன்றில் 2/3 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் ஆணையை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் அதன் நட்பு அணிகளுக்கும் பெற்றுத் தந்த நாட்டுப் பற்றுடைய மக்களுக்கு நான் முதலில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
சர்வஜன வாக்குப் பலம் நாம் அனைவரும் மதித்துப் பாதுகாக்க வேண்டிய ஜனநாயக உரிமையாகும். எனவே இந்த தேர்தலில் தமது பெறுமதியான வாக்கினை பயன்படுத்திய அனைத்து இலங்கை வாக்காளர்களுக்கும் நான் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகப்பெரும் மக்கள் ஆணையை வழங்கியது என்மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகவாகும். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் என நான் வழங்கிய உறுதிமொழியை இதுவரையிலான எனது செயற்பாடுகளின் மூலம் நிரூபித்திருக்கிறேன்.
ஜனாதிபதி தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரையான காலம் எமக்கு மிகவும் சவால்மிக்க ஒரு காலப்பகுதியாக இருந்தது. வீழ்ச்சியடைந்திருந்த ஒரு பொருளாதாரத்தையே நாம் பொறுப்பேற்றோம். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் நாம் சிறுபான்மையான ஒரு அரசாங்கத்துடனேயே செயற்பட வேண்டியிருந்தது. இதற்கு மேலதிகமாக எமக்கு இக்காலப்பகுதியில் முழு உலகையும் ஆட்கொண்டிருந்த கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று.
கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் உலகின் முக்கிய நாடுகள் கூட முடங்கியிருந்த நிலையில் அந்த சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு எமக்கு இயலுமானது. நோய்த் தொற்று நிலைமை பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெளிநாடுகளினதும் பாராட்டைப் பெற்றது.
இந்த ஒன்பது மாதக் காலப் பகுதியில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நாம் நாட்டை நிர்வகித்த முறைபற்றி நாட்டு மக்கள் தெளிவுடன் உள்ளார்கள் என்பதை ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணிக்கு கிடைத்துள்ள மிகப் பெரும் மக்கள் ஆணை எடுத்துக்காட்டுகிறது. அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்திற்கு மக்கள் மதிப்பளித்து வருகின்றனர்.
மக்கள் பிரதிநிதிகளாக பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நாம் எப்போதும் மதிப்பளிக்கிறோம். மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கு அப்போதுதான் முடியுமாக இருக்கும்
எமது நாட்டு அரசியலமைப்பின் பிரகாரம் எனது பதவிக்காலப் பகுதியில் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும், பௌத்த சாசனத்தை பாதுகாத்து வளப்படுத்துவதாகவும் நான் உறுதியளித்திருக்கின்றேன்.
அதற்கு ஏற்ப அரச நிர்வாகத்திற்காக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான் முன்னணி பௌத்த பிக்குகளைக்கொண்ட ஆலோசனை சபை ஒன்றை அமைத்துள்ளேன். அதேபோன்று தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கும் எமது பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் நான் விசேட செயலணி ஒன்றை அமைத்துள்ளேன்.
பௌத்த சமயத்திற்கான முன்னுரிமையை உறுதிசெய்யும் அதேநேரம், இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையும் தாம் விரும்பும் சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதுவும் மக்களுக்கு தற்போது தெளிவாகியுள்ளது. எமது பாரம்பரிய மரபுரிமைகளையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கும் கிராமிய கலைகளை பாதுகாத்து மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் காரணமாக நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்கும்போது மக்கள் மத்தியில் நாட்டின் பாதுகாப்பு பற்றிய நம்பிக்கை பெருமளவு வீழ்ச்சியடைந்திருந்தது. எமது அரசாங்கத்தின் முக்கிய கொள்கை நாட்டின் பாதுகாப்பாகும் என்பதை உறுதி செய்து பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையை மறுசீரமைத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கி நாட்டின் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எந்தவொரு பிரஜைக்கும் தனதும் தனது குடும்பத்தினதும் பாதுகாப்புப் பற்றி எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை நாம் மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறோம்.
நான் உறுதியளித்தவாறு பொதுவான மக்கள் வாழ்க்கைக்கு தடையாக உள்ள பாதாள உலக செயற்பாடுகள், போதைப்பொருள் பிரச்சினை போன்ற சமூக சீரழிவுகளில் இருந்து மக்களை மீட்பதற்காக முறையான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு இருப்பது மக்களின் நம்பிக்கை மேம்படுத்துவதற்கு காரணமாகியுள்ளது.
நாம் உறுதியளித்தவாறு ஒழுக்கமான, பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்பி வருகின்றோம். இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தில் தெளிவானதொரு மாற்றத்தை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிப்பதற்காக அதுவரையில் இருந்துவந்த சம்பிரதாயங்களை மாற்றி நிபுணர் குழுவொன்றின் ஊடாக தகைமைகளை கண்டறிந்து நியமனங்களை மேற்கொள்ளும் முறையான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குடும்பத்தினர், நண்பர்கள், தனக்கு வேண்டியவர்களை நியமிக்காது தொழில் வல்லுனர்கள், தொழில் முயற்சியாளர்கள், கல்வியியலாளர்களைக் கொண்ட அனுபவம் வாய்ந்த குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக் கொள்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
அதேபோன்று நாம் உற்பத்தி பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தமது உற்பத்திகளுக்காக அதிக விலையை பெற்றுக்கொடுத்துள்ளோம். ஏற்றுமதி பயிர்களை மீள் ஏற்றுமதி நடவடிக்கைக்காக இறக்குமதி செய்வதை நிறுத்தியும், இந்த நாட்டில் பயிரிட முடியுமானவற்றை இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்தியும் சுதேச விவசாயிகளை பாதுகாப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம்.
விவசாயிகளுக்கு தேவையான உரத்தினை இலவசமாக வழங்கினோம். நாடளாவிய ரீதியில் கைவிடப்பட்டிருந்த விவசாயக் காணிகளில் மீண்டும் பயிரிடுவதற்கு மக்களை ஊக்குவித்தோம். இவை அனைத்தின் ஊடாகவும் நாம் இந்த நாட்டின் விவசாயத்துறைக்கு புத்தெழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம்.
நாம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் சுதேச தொழில் முயற்சியாளர்களை இலக்காகக்கொண்டு வரிச் சலுகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம். வியாபாரத் துறையை வலுவூட்டுவதற்காக வட்டி விகிதத்தை குறைத்தோம். உள்நாட்டு வர்த்தகர்கள், தொழிற்துறையாளர்களை பாதுகாப்பதற்காக போட்டித் தன்மை வாய்ந்த இறக்குமதிகளை மட்டுப்படுத்தினோம்.
இந்த தேர்தலில் மக்கள் உற்சாகமாக எமக்கு ஆதரவு வழங்கியிருப்பது இந்த வகையில் எங்களைப் பற்றி அவர்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நம்பிக்கையே காரணம் என்பது தெளிவனதாகும். நாம் அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்வோம்.
மக்கள் வழங்கிய ஆணையை மிகச் சரியாக புரிந்துகொள்வது இங்கு முக்கியமானதாகும்.
என்மீதும் பிரதமர் உள்ளிட்ட புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நாம் மதிக்கிறோம். மக்கள் இவ்வளவு பெரிய மக்கள் ஆணையை அரசாங்கத்திற்கு வழங்கி இருப்பது எதனை எதிர்பார்த்து என்பது பற்றி நாம் அறிவோம். எக்காரணத்தினாலும் அந்த எதிர்பார்ப்புகள் வீண்போவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.
மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதி ஒருவரின் அடிப்படை பொறுப்பு மக்கள் சேவையாகுமென்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இந்த அனைத்து பதவிகளும் பொறுப்புக்களே அன்றி வரப்பிரசாதங்கள் அல்ல என்பதை நினைவில் வைத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
நான் இந்த தேர்தலில் எமது அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து அபேட்சகர்களுக்கும் ஆதரவு வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் சுற்றுப் பயணம் செய்தேன். அரசியல் கூட்டங்களுக்குப் பதிலாக இந்த சுற்றுப் பயணங்களின் போது நான் மக்களிடம் சென்று நேரடியாக அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தேன். மக்கள் முன் வைத்த கோரிக்கைகளில் மிகப் பெரும்பாலானவை பொதுத் தேவைகளேயன்றி தனிப்பட்ட தேவைகள் அல்ல. சுதந்திரம் பெற்று 72 வருடங்களின் பின்னரும் மக்களின் பெரும்பாலான சாதராணமான தேவைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை.
பல ஆண்டுகளாக தாம் வாழ்ந்து வரும் காணிகளுக்கு உரிய உறுதிகள் கிடைக்கப்பெறாத மக்கள் உள்ளனர். நாம் அவர்களுக்கு உரிய முறைமைகளின் படி உறுதிகளை வழங்குவோம். உரிய மாற்றீடுகள் இன்றி பல பரம்பரைகளாக வாழ்ந்து வந்த, தாம் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலங்களில் இருந்து எவரையும் வெளியேற்ற மாட்டோம்.
யானைகள் – மனிதர்கள் மோதல் இன்று பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வொன்றை கண்டறிவதற்கு தற்போது நிபுணர் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியானதொரு இராஜாங்க அமைச்சு ஏற்படுத்தப்பட்டிருப்பது நிலையான தீர்வொன்று தேவை எனும் காரணத்தினாலாகும்.
நாடளாவிய ரீதியில் நம்ப முடியாதளவு அதிக சதவீதமான மக்கள் குடிநீர் இன்றி கஷ்டப்படுகின்றனர். நாம் இந்த மனிதாபிமான பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். ஒரு தேசிய கொள்கையாக அடுத்து வரும் சில ஆண்டுகளில் அனைத்து பிரதேசங்களுக்கும் குடிநீரை பெற்றுக்கொள்ள நாம் ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிப்போம்.
பெற்றேர்கள் தமது பிள்ளைகளுக்கு கல்வி பெறுவதற்கான பொருத்தமான பாடசாலைகளை பெற்றுத் தருமாறு கோருகின்றார்கள். போதுமானளவு தேசிய பாடசாலைகள் இல்லாத குறை எல்லா இடங்களிலும் உள்ளது. பெரும்பாலான பாடசாலைகளில் பெருமளவு குறைபாடுகள் உள்ளன.
ஆசிரியர் பற்றாக்குறை, போதுமானளவு விஞ்ஞான ஆய்வுகூடங்கள், வாசிகசாலைகள், விளையாட்டு வசதிகள் இல்லாமை பற்றி அடிக்கடி கூறக் கேட்கிறோம். பொருளாதாரத்திற்கு வினைத்திறனான பங்களிப்பை வழங்குவதற்காக விஞ்ஞான, தொழிநுட்ப பாடங்களை கற்குமாறு நாம் பிள்ளைகளிடம் கூறினாலும் அதற்கான அடிப்படை வசதிகள் பெரும்பலான பாடசாலைகளில் இல்லை.
இந்த நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் தாம் விரும்பும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான கல்வியை பெற்றுக்கொள்வதற்கும் அவர்களின் திறன்களை விருத்தி செய்வதற்கு உதவுவதற்கும் அரசாங்கம் மேற்காண்டு வரும் செலவுகள் எதிர்காலத்திற்காக செய்யப்படும் முதலீடாகும். புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள அமைச்சுகளின் ஊடாக நாம் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்போம்.
கிராமிய வைத்தியசாலைகளில் வளங்களும் வசதிகளும் மிகக் குறைவாக உள்ளன. வைத்தியர்கள், தாதிகள் மற்றும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகின்றது. சில பிரதேசங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இலவச சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்கும்போது ஏற்படும் இந்த நிலைமைகளை நாம் இல்லாமல் செய்வோம்.
ஆயுர்வேத மருத்துவத்தையும் சுதேச வைத்தியத் துறையையும் முன்னேற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
அதிக அந்நியச் செலாவணியை செலவு செய்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக பல மருந்துகளை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம். மருந்து இறக்குமதியின்போது இடம்பெறுகின்ற பெரும் ஊழல் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதன் காரணத்தினால் தான் மருந்து உற்பத்திக்கு தனியான இராஜாங்க அமைச்சொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த நாட்டின் மக்களில் அதிகளவானவர்கள் இன்றும் சுயதொழில்களை செய்வதன் மூலமே வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் விவசாயிகளாக உள்ளனர்.
அவர்கள் கேட்பதெல்லாம் உரிய காலத்திற்கு நீரையும் உரத்தையும் பெற்றுத் தருமாறு மட்டுமேயாகும். இந்த கோரிக்கைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். அந்த வகையில் நாடளாவிய ரீதியில் குளங்களை புனரமைப்பதுடன், நீர்ப்பாசன அபிவிருத்திக்கு விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்றை நாம் முன்னெடுப்போம்.
வேலை வாய்ப்பின்மை இன்று இளைஞர் தலைமுறை முகங்கொடுக்கும் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாகும். இதற்காக நாம் குறுகிய கால, நீண்டகால பல தீர்வுகள் குறித்து கலந்துரையாடியுள்ளோம்.
நாம் தற்போது நாட்டில் வாழும் வறிய குடும்பங்களை இலக்காகக்கொண்டு ஒரு இலட்சம் தொழில்களை வழங்குவதற்கு நிகழ்ச்சித்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம். அதனோடு இணைந்ததாக 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கும் அவர்களிடமிருந்து வினைத்திறனான சேவையை பெற்றுக்கொள்வதற்காக முறையான பயிற்சி ஒன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அரச தொழில்களை வழங்கும்போது நாட்டில் மிகுவும் வறிய குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று தொழில் வாய்ப்புகளை வழங்கும்போது அனைத்து மாகாணங்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அரச நியமனம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் நாட்டுக்கு வினைத்திறனான சேவையை வழங்க வேண்டும். எனவே எந்தவொரு அமைச்சுக்கும் அல்லது நிறுவனத்திற்கும் தேவையற்ற வகையில் ஆட்சேர்ப்புகள் செய்யப்பட மாட்டாது.
தத்தமது துறைகளில் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் நாட்டுக்கு தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுமாறு அனைத்து அமைச்சர்களிடமும் இராஜாங்க அமைச்சர்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்து அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களில் அந்தந்த துறைகளில் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று குறித்த துறைகளில் சுயதொழில் மேம்பாட்டுக்கும் தொழில் முயற்சிகளை வலுவூட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எமது பொறுப்பும் கடமையுமாக இருக்க வேண்டியது தொழில்களை உருவாக்குவதேயன்றி தொழில்களை வழங்குவதல்ல.
உள்நாட்டு மற்றும் பூகோள சவால்களை வெற்றிகொள்ளும் பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்த வேண்டுமானால் நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். இம்முறை இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உண்மையான பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்துவதற்காக மக்கள் மைய பொருளாதாரம் ஒன்றின் தேவையை நாம் கண்டறிந்துள்ளோம். அமைச்சுக்களை ஒதுக்கும்போதும் அவற்றுக்கான விடயதானங்களை தீர்மானிக்கும் போதும் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மீது தாக்கம் செலுத்தும் விவசாயம். பெருந்தோட்டத்துறை, மீன்பிடிக் கைத்தொழில் அதேபோன்று பாரம்பரிய கைத்தொழில்கள், சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவது சம்பந்தமாக கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதைப் போன்று ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதும் எமது அடிப்படை இலக்குகளாகும்.தற்போது எமது ஏற்றுமதி பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, தென்னை, இறப்பர் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் திருப்திகரமான நிலையில் இல்லை.
தேயிலை பயிர்ச் செய்கையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேநேரம் சிறிய மற்றும் நடுத்தர தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் அரசாங்கம் உதவிகளைச் செய்யும். மூடப்பட்டுள்ள தேயிலைச் தொழிற்சாலைகளின் காரணமாக அவர்கள் அதிக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவற்றை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன். முறைகேடுகளை ஒழித்து உயர் தரங்களுடன் கூடிய தேயிலை ஏற்றுமதியை ஊக்குவிப்போம். ‘Ceylon Tea’ வர்த்தக சின்னத்திற்கு உள்ள அங்கீகாரத்தை பலப்படுத்துவோம்.
தென்னையை புதிதாக பயிரிடுவதற்கு ஊக்குவிப்புகளை வழங்குவோம். இறப்பருக்கு உரிய விலையை பெற்றுக்கொடுப்பதற்காக இந்நாட்டில் தயாரிக்கப்படும் இறப்பர் பாவனை, இறப்பர் சார்ந்த கைத்தொழில்களை ஊக்குவிப்போம். செம்பனை பயிர்ச் செய்கையை நாம் முற்றாக நிறுத்துவோம்.
மிளகு, கறுவா போன்ற ஏற்றுமதி பயிர் உற்பத்தியை நாம் ஊக்குவிப்போம். விவசாய உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்த்து ஏற்றுமதி செய்வதன் ஊடாக விவசாயிகளுக்கு ஸ்திரமான விலையை பெற்றுக்கொடுப்பதுடன், பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.
அமைச்சுகளுக்கு பொறுப்புக்களை வழங்கும்போது நகர மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிக்கக்கூடிய பல்வேறு துறைகளை இனங்கண்டு அவற்றுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவும் அவர்களுக்கான விடயதானங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனித வள அபிவிருத்தியை நாம் முன்னுரிமைக்குரியதாக இனங்கண்டு இருப்பதால் அமைச்சுக்களை ஒதுக்கும்போது கல்வித்துறையை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வந்து, அதில் வேறுபட்ட பொறுப்புகளுக்காக நான்கு இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளோம். முன்பள்ளிப் பாடசலைகள், கல்வி மறுசீரமைப்பு, திறன் விருத்தி, அறநெறிப் பாடசாலைகள், பிக்குகளுக்கான கல்வி ஆகிய துறைகளுக்கு தனியான இராஜாங்க அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது அவற்றில் உள்ள முக்கியத்துவத்தின் காரணமாகவே ஆகும்.
எமது எதிர்கால இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டுமாயின் தொழிநுட்ப கல்விக்கு விசேட கவனம் செலத்த வேண்டும். 06ஆம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரை கல்வி மறுசீரமைப்பில் நாம் இது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.
உயர் தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், திறந்த பல்கலைக்கழக முறைமையை முன்னேற்றுவதற்கும் தொலைக்கல்வியை முன்னேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்துறைகளை மறுசீரமைத்து இந்த பட்டப்படிப்புகள் பொருளாதாரத்திற்கு நேரடியாகப் பங்களிப்பு வழங்கக்கூடிய துறைகளாக உறுதி செய்யப்படும்.
மின்சாரத்தின் விலை நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தும் ஒரு முக்கிய காரணியாகும். எனவே மீள் பிறப்பாக்க, சக்தி வள உற்பத்தி மார்க்கங்களை மேம்படுத்துவதற்காக தனியானதொரு இராஜாங்க அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெறுமதி சேர்ப்பதற்காக புதிய தொழிநுட்ப பாவனைக்கும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கும் ஆக்கத்திறன்வாய்ந்த வகையில் புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறிவதற்கும் வர்த்தகர்களுக்கு உதவுவதற்கும் குறித்த அமைச்சுக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
எமது நாடு இயற்கை வளம் நிறைந்த ஒரு வளமான நாடு என்ற போதிலும் பெறுமதி சேர்க்கும் கைத்தொழில்கள் இன்னும் சர்வதேச மட்டத்திற்கு முன்னேறவில்லை. இரத்தினக்கற்கள், கனிய மணல் போன்ற இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்யும்போது பெறுமதி சேர்த்து நாட்டுக்கு அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எமது பாரம்பரிய கைத்தொழில்களான பத்திக், சுதேச ஆடைகள், பித்தளை, பிரம்புகள், மட்பாண்டங்கள், மரப்பாண்டங்கள், இரத்தின கற்கள், ஆபரணங்கள் கைத்தொழிலை உரிய வகையில் முன்னேற்றுவதற்கும் சுயதொழில்களை ஊக்குவிப்பதற்கும் புதிய தொழில்களை உருவாக்குவதற்கும் வர்த்தக துறையை கட்டியெழுப்பி பெருமளவு வெளிநாட்டு வருமானத்தை நாட்டுக்கு பெற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும்.
நாட்டு மக்களில் 1/3 பகுதியினர் விவசாயம், பெருந்தோட்டத்துறை, மீன்பிடிக் கைத்தொழில் ஆகியவற்றை ஜீவனோபாயமாக கொண்டுள்ளனர். நாம் இந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்த கைத்தொழில் துறையை முன்னேற்றுவதற்காக சம்பிரதாய முறைமைகளை விஞ்சிய தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய அனுகுமுறைகளின் தேவை உள்ளது. விவசாயத்துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் மீன்பிடி, கடற்றொழில் துறையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளை நேரடியாக இலக்காகக் கொண்டு அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டிருப்பது இதற்குத் தேவையான உரிய கவனத்தை வழங்குவதற்கே ஆகும்.
உயர் தரம்வாய்ந்த விதைகளை உள்நாட்டில் உற்பத்திசெய்து, அவற்றை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், விவசாய உற்பத்திகளுக்கு சிறந்த பொதியிடல் மற்றும் போக்குவரத்து முறைமைகளை அறிமுகப்படுத்தி வீண்விரயத்தை குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். பசும்பால் உற்பத்தி மற்றும் முட்டை உற்பத்தியையும் நாம் முன்னேற்றுவோம்.
நச்சுத்தன்மையற்ற உணவை உற்பத்திசெய்யும் நோக்குடன் அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையின் விவசாயத் துறையை முழுமையாக சேதன பசளைப் பாவனைக்கு மாற்றும் வகையில் உள்நாட்டில் சேதன பசளை உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
மீன்பிடித் கைத்தொழிலில் பாரிய முன்னேற்றத்தை கொண்டுவர நாம் எதிர்பார்க்கின்றோம். கடலினால் சூழப்பட்டுள்ள எமது நாட்டுக்கு மீன் இறக்குமதியை நாம் நிறுத்த வேண்டும். மீன் பிடி கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான புதிய தொழிநுட்பத்தையும் இயந்திரங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை நாம் அறிமுகப்படுத்துவோம். ஆழ்கடலில் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள பலநாள் படகுகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக அனைத்து மீன்பிடி துறைமுகங்களையும் நவீனமயப்படுத்துவதுடன், தேவைக்கு ஏற்ப புதிய துறைமுகங்களை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுப்போம்.
சட்டவிரோதமான சர்வதேச பலநாள் படகுகளின் மூலம் இலங்கை கடற்பகுதியில் மேற்கொள்ளப்படும் சுரண்டலை நிறுத்துவோம். நன்னீர் மீன்வளர்ப்பு கைத்தொழிலை முன்னேற்றுவதற்கும் புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவது எமது திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அனைத்து அமைச்சுக்களுக்கும் இராஜாங்க அமைச்சுக்களுக்கும் தமது விடயதானங்கள் மற்றும் பொறுப்புக்கள் தெளிவாக வேறுபடுத்தி வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர்களினால் குறித்த துறைகளின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுடன், இராஜாங்க அமைச்சுக்களினால் செயற்பாடுகள், வினைத்திறன், கண்காணிப்பை மேற்கொள்வது எதிர்பார்க்கப்படுகின்றது. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை தமது அமைச்சுக்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாலும் நிதிப் பொறுப்பு தம்மிடம் உள்ள காரணத்தினாலும் இராஜாங்க அமைச்சர்களுக்கு தடையின்றி தமது பொறுப்புக்களை நிறைவேற்ற முடியும்.
அரச சேவையின் மூலம் தாம் எதிர்பார்க்கும் சேவை வினைத்திறனாகவும் உரிய வகையிலும் கிடைப்பதில்லை என பொதுமக்களிடம் குற்றச்சாட்டு உள்ளது. எனவே உங்களின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், நிறுவனங்களினால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை வினைத்திறனாகவும் உடனடியாகவும் பெற்றுக்கொடுக்குமாறு நான் அமைச்சர்களிடமும் இராஜாங்க அமைச்சர்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
மக்களுக்கு அல்லது அரசாங்கத்திற்கு எவ்வித பெறுமானத்தையும் கொண்டுவராத சில நிறுவன செயற்பாடுகளினால் ஏற்படுவது கால விரயம் மட்டுமே என நான் கடந்த காலத்தில் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு சென்ற வேலையில் கண்டுகொண்டேன். மக்களுக்கு சேவைகளை வழங்கும் போது பின்பற்றும் பாரம்பரிய முறைமைகளுக்கு பதிலாக நிறுவன செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொண்டு மக்களுக்கு இலகுவாகவும் விரைவாகவும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக புதிய முறைமைகளை நீங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். இதற்காக முடியுமானளவு புதிய தொழிநுட்ப தீர்வுகளை கண்டறிய வேண்டும்.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் வீண்விரயத்தையும் ஊழலையும் ஒழிப்பதாக நாம் மக்களுக்கு உறுதியளித்திருந்தோம். இது எம் அனைவரினதும் முக்கிய பொறுப்பாகும். அனைத்து அமைச்சுக்கள், நிறுவனங்களில் வீண்விரயத்தையும் ஊழலையும் முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுப்போம். வீண்விரயம், ஊழலுடன் சம்பந்தப்படுபவர்களுக்கு அவர்களது தராதரங்களை பொருட்படுத்தாது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நான் பின்னிற்க மாட்டேன்.
அரசாங்கம், அமைச்சு மற்றும் அரச துறையின் ஊடாக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதன் முன்னேற்ற நிலைமைகள் தொடர்ச்சியாக மீளாய்வுசெய்யப்படும். ஏதேனும் ஒரு அமைச்சு அந்த இலக்குகளை அடைவதில் பின்னிற்குமாயின், அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான மாற்றங்களை செய்வதற்கு நான் ஒருபோதும் பின்னிற்க மாட்டேன்.
தற்கால அரசியல் கலாசாரத்தில் பெரும்பாலும் மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் மக்களிடம் செல்வதை விட்டுவிடுகின்றனர் என்பது அண்மைக் காலத்தில் நான் நாடளாவிய ரீதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் மக்கள் முன்வைத்த மனக்குறைகளில் இருந்து தெரியவந்தது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி மக்களிடம் சென்று அவர்களது உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு ஜனநாயக நாட்டின் வெற்றிக்கு அதன் அரசியலமைப்பே அடிப்படையாகும். 1978 முதல் 19முறை திருத்தப்பட்டுள்ள எமது அரசியலமைப்பில் உள்ள உறுதியற்ற தன்மை, சிக்கல்கள் காரணமாக தற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் உறுவாகியுள்ளன.
அரசியலமைப்பில் மாற்றத்தை செய்வதற்காக நாம் கோரிய மக்கள் ஆணை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள காரணத்தினால் எமது முதலாவது பணியாக நாம் மக்களுக்கு உறுதியளித்தவாறு, 19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம்.
அதன் பின்னர் அனைவருடனும் இணைந்து நாட்டுக்கு தேவையானதும் பொருத்தமானதுமான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்போம். இதன் போது இந்நாட்டின் அனைத்து மக்கள் சம்பந்தமாகவும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்குவோம்.
தெளிவான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாத, தீவிரவாதத்தின் அழுத்தங்களுக்கு தொடர்ச்சியாக அடிபணியும், நிலையற்ற பாராளுமன்றம் ஒரு நாட்டுக்கு பொருத்தமானதல்ல. புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் போது தற்போதைய தேர்தல் முறைமையில் மாற்றங்களை செய்யவேண்டியது அவசியமாகும்.
விகிதாசார தேர்தல் முறைமையில் உள்ள சாதகமான பண்புகளை பாதுகாக்கும் அதேநேரம் பாராளுமன்றத்தின் ஸ்திரத்தன்மையையும் மக்களின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் உறுதிசெய்யும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். நான் எனது நாடு குறித்து பெருமையடைகிறேன். எனக்கு எனது நாடு பற்றிய ஒரு தொலைநோக்குள்ளது. எமது நோக்கம் வினைத்திறன் மிக்க பிரஜை, மகிழ்ச்சியாக வாழும் குடும்பம், ஒழுக்கப்பண்பாடான சமூகத்தைக் கொண்ட சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதாகும். இதுவரை நாம் மேற்கொண்ட அனைத்து செயற்பாடுகளையும் போன்று, இதன் பின்னரும் செயற்படுவதற்காக எதிர்பார்க்கும் நடவடிக்கைகளை திட்டமிடுவதும் இந்த நோக்கங்களின் அடிப்படையிலேயாகும்.
நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை வந்தடைந்துள்ளோம். மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும் மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். ஏந்தவொரு சக்திக்கும் அடிபணியாது இந்த நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான பொறுப்பு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்கால தலைமுறைக்காக தற்கால தலைமுறை அந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
இது எம் அனைவரினதும் தாய்நாடு. எனவே இனம் மதம் கட்சி பேதமின்றி நாம் அனைவரும் நாட்டுக்காக ஒன்றுபடவேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளது. மக்களுக்கு நாம் உறுதியளித்த சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக என்னுடன் ஒன்றிணையுமாறு நான் உங்கள் அனைவருக்கும் நட்புக் கரம் நீட்டி அழைப்பு விடுக்கின்றேன்.
உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்!