இரண்டாவது நாள் முற்றுகைக்குள் ஜனாதிபதி மாளிகை: ஆயிரக்கணக்கான மக்கள் விடிய விடிய போராட்டம்

முற்றுகைக்குள் ஜனாதிபதி மாளிகை

முற்றுகைக்குள் ஜனாதிபதி மாளிகை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தும் போராட்டக்காரர்களால் கொழும்பில் ஜனாதிபதி செயலகம் தொடர்ந்தும் முற்றுகையிடப்பட்டுள்ளது. நேற்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டம் இரவிரவாக தொடர்ந்துது. அப்பகுதியில் பொலிஸ், இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலை தொடர்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை முதல் காலிமுகத்திடல் வளாகத்தில் மாபெரும் தன்னெழுச்சிப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பெருந்திரளான இளைஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையிலேயே காலிமுகத்திடலை அண்மித்த பகுதியிலுள்ள ஜனாதிபதி செயலகம், போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது. ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராக விண்ணைப் பிளக்கும் கோஷங்களுடன் சுலோகங்களையும் அவர்கள் தாங்கி நிற்கின்றனர். இந்தப் போராட்டம் காரணமாக கொழும்பு நகரிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காலி முகத்திடல் பகுதி முழுமையாக முடக்கப்பட்டிருகு;கின்றது,

பொது அமைப்புக்கள் ஆர்ப்பாட்டக்காரருக்கு தண்ணீர்ப் போத்தல்களையும் உணவுப் பொருட்களையும் வழங்கிவருகின்றார்கள். நேற்று இரவிரவாக இந்தப் போராட்டம் தொடர்ந்தது. ஆயிரக்கண்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் இந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால், பெரும் பதற்றமான தொடர்கிறது.

இந்நிலையில், காலிமுகத்திடல் பகுதிகளில் தொலைத்தொடர்பு முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இணைய வசதிகள் செயற்படவில்லை. குறித்த பகுதிகளில் இருந்து வெளிநபர்களை தொடர்புகொள்ளாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில் பகுதியில் தொலைபேசிகளை முடக்கும் ஜமார் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.