”இலங்கைத் தமிழர்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்க வேண்டும்” அண்ணாமலை வலியுறுத்தல்

“போரினால் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்க வேண்டும்” என்று ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் நடைபெற்று வரும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி, ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கிய பின்னர், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக அண்ணாமலை குரல் கொடுத்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

“போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உலக நாடுகளெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டியது அவசியமாகும்.

தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 90 ஆயிரம் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இவ்வாறாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து துணை நிற்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

“நான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்த காலப்பகுதியில், இலங்கைத் தமிழர்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு உறுதுணையாகவும் உதவியாகவும் இருந்தேன்”.

“கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய போதிலும், இனிவரும் காலங்களிலும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்பதுடன், அவர்களுக்கு எப்போதும் துணையாக நிற்பேன்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச அரங்கில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகவும், அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கப் போவதாக அண்ணாமலை இந்த விழாவில் உறுதியளித்துள்ளார்.