முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப் படவேண்டும் -ரவிகரன்

341 Views

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

முன்பள்ளி ஆசிரியர்களின் வேதனம் அதிகரிக்கப்படுவதுடன், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று முன்பள்ளி ஆசிரியர்கள் 21.02.2022 இன்று தமக்கான சம்பள உயர்வைக்கோரியும், நிரந்தர நியமனத்தினைக்கோரியும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முன்பள்ளி ஆசிரியர்களைத் தியாகிகள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் மிகவும் உன்னதமான சேவைகளையாற்றிவருகின்றனர்.

இந் நிலையில் நிரந்தரநியமனம் வழங்கப்படவேண்டும், சம்பளஉயர்வுவேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து கரைதுறைப்பற்று கோட்டத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.

முல்லை வலயத்தின்கீழ் சேவையாற்றுகின்ற இந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வெறும் ஆறாயிரம் ரூபாய் சம்பளமே வழங்கப்படுகின்றது. தற்போது நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்திருக்கும் சூழலில், வெறும் ஆறாயிரம்ரூபாய் ஊதியத்துடன் அன்றாட வாழ்க்கையினை இந்த முன்பள்ளி ஆசிரியர்கள் எவ்வாறு கொண்டுசெல்லமுடியும்.

குறிப்பாக கரைதுறைப்பற்றுகோட்டத்திலே 118முன்பள்ளி ஆசிரியர்கள் சேவையாற்றிவருகின்றனர்.

அவர்கள் அனைவருமே தகுதிவாய்ந்த ஆசிரியர்களாகவே காணப்படுகின்றனர். பலர் தமது உயர்அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி டிப்ளோமா கற்கைநெறியினை முடித்திருப்பதுடன், உயர்தரத்தில் மூன்றுபாடங்களிலும் சித்தியடைந்தவர்களென தகுதியானவர்களாகவே இந்த முன்பள்ளி ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.

அத்தோடு கரைதுறைப்பற்று கோட்டத்தின் கீழ் 66இற்கும் மேற்பட்ட பெண்தலைமைத்துவக் குடும்ப முன்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந் நிலையில் அவர்கள் தமக்கு சம்பளமாகக் கிடைக்கின்ற ஆறாயிரம் ரூபாயைவைத்து என்ன செய்வது.

மேலும் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளக்கொடுப்பனவுகள் மூன்றுவிதமாக இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் பிரதேசசபைகளூடாக பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500ரூபாய் சம்பளக்கொடுப்பனவும், வலயத்தின் கீழ் பணியாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 6000ரூபாய் சம்பளக்கொடுப்பனவும், சிவில்பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது 38000ரூபாய் அளவில் சம்பளக்கொடுப்பனவும் வழங்கப்படுவதாக அறியமுடிகின்றது.ஏன் இந்த பாகுபாடு?

நிச்சயமாக அனைவரும் ஒரேமாதிரியாக நடாத்தப்படவேண்டும். அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதியான வேதனத்தை உரியவர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தற்போதைய சூழலில் ஆட்சித் தலைவராலோ, அவர்சார்தோராலோ அல்லது ஏனைய அரச உத்தியோகத்தர்களாலோ வெறும் ஆறாயிரம் ரூபாயினைவைத்து வாழ்க்கையை நடாத்த முடியுமா?

எனவே மனிதாபிமான முறையிலே இந்த விடயத்தினை உரியவர்கள் கவனத்திலெடுக்கவேண்டும். ஏனைய உத்தியோகத்தர்களைப்போல இந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்குரிய தகுதியான சம்பளம் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு நிரந்த நியமனமும் வழங்கப்படவேண்டும். – என்றார்.

Tamil News

Leave a Reply