அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உள்பட 58 பேரை வெவ்வேறு கோயில்களில் அரச்சகராக நியமித்து பணி நியமன ஆணை வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இவர்களில் 24 பேர் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன.
கடந்த கால ஆட்சியில் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதில் அதிமுக அரசு ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அரசாணை தாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் செயல்படுத்தப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அதனை நிறைவேற்று வகையில் இன்று (சனிக்கிழமை) அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அரசாணையின் கீழ் பணி நியமண ஆணையயை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பயிற்சி பெற்ற 58 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.