ஆயுதமற்ற போராட்டத்துக்குள் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்-கேமன்குமார்

ஆயுதமற்ற போராட்டத்துக்குள் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அரசாங்கமே வளங்களை விற்கின்ற நடவடிக்கையிலும் குத்தகைக்கு வளங்களை வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது.

மக்கள் தான் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என உலக மீனவர்கள் அமைப்பின் பொதுச் செயலாளரும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான கேமன்குமார் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதற்கு போராட வேண்டியவர்களாக இருக்கின்ற நிலையில் இந்த நாட்டின் வளங்களை சுரண்டுகின்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. ஜனநாயக நாடு என்று கூறினாலும்  கரையோர நிலங்கள் விவசாய நிலங்கள் களப்பு மற்றும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலங்கள் கூட அபகரிக்கப்படுகின்ற இல்லாமல் ஆக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டு வருகிறது. அபிவிருத்தி என்ற போர்வைக்குள் இத்தகைய பல வேலை திட்டங்கள் இடம் பெற்று வருகிறது.

பொருளாதார வளர்ச்சியை காரணம் காட்டி நாட்டில் வளங்கள் விற்பனை செய்யப்படுவதும் குத்தகைக்கு விடுதல் போன்றவற்றால் பல்தேசிய  கம்பனிகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இத்தகைய திட்டங்களை மக்களுக்கு காட்டுகின்றார்கள். இவ்வாறு நாம் செய்யாவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும், இதனால் தான் நாம் முன்னேறி வருகின்றோம் எனக் கூறி வருகின்றார்கள். ஆனால் இது உண்மை நிலை அல்ல குறிப்பாக இன்று மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சாரக் கட்டணத்தை ஒரு மாதம் கட்டாது விட்டால் உடனே துண்டித்துவிடுகின்றார்கள். அதனைச் செய்கிறோம் இதனைச் செய்கின்றோம் என்று கூறுபவர்கள் எதற்காக இந்த மின் வெட்டை ஏற்படுத்துகின்றார்கள். இது மட்டுமன்றி சில நிறுவனங்களை குத்தகைக்கு விடவேண்டும் எனக் கூறுகின்றார்கள். இவ்வாறான விடயங்ளை மக்கள் கேள்வி கேட்டு விடுவார்கள் என்பதைத் தடுப்பதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தை புதிதாக கொண்டு வருகின்றார்கள்.

மக்கள் கிளர்ந்து கேள்வி கேட்டாலும் அதனை அடக்கத்தான் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்படுத்துகின்றார்கள். மக்களை அச்சுறுத்தி அடக்கி வைப்பற்காகத் தான் இந்த நிலை. இதேபோன்று இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்காது பேச்சுவார்த்தை என்ற போர்வையில் இழுத்தடிப்புச் செய்கின்றார்கள்.

வடக்கில் இந்தியமீனவர்களின் அத்துமீறல்கள் இருந்தால் தெற்கு மீனவர்கள் அது தமக்குப் பிரச்சினை இல்லை என்று நினைக்கின்றார்கள். அதேபோன்று தெற்கில் இந்திய மீனவர்கள் பிரச்சினை என்றால் வடக்கு மீனவர்கள் தமக்குப் பிரச்சினை இல்லை என்று நினைக்கின்றார்கள். ஆனால் எங்கோ ஒரு இடத்தில் ஆக்கிரமிப்பு நடக்கும் போது அனைத்து இடங்களுமே பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே ஆயுதமற்ற ஒரு போராட்டத்தில் தான் நாங்கள் வாழ்ந்துவருகின்றோம். மக்கள் என்னதான் இருந்தாலும் தங்கள் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவாக வெளிப்படுத்துகின்ற வகையில் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும் என்றார்.