ஈழத்தமிழரின் இறைமை மீட்புக்கு
பலதரப்பட்ட ராஜதந்திர தொடர்பு உடன் தேவை | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 231
ஈழத்தமிழரின் தேசியப்பிரச்சினை என்பது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தாங்கள் வாழ்ந்து வரும் தாயகத்தில் தங்களுக்கு உள்ள தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையை உறுதிப்படுத்துதலே. பிரித்தானிய அரசு ஈழத்தமிழர்களின் இறைமையின் மீயுயர் பொறுப்பாளராக சோல்பரி அரசியல் அமைப்பின் 29(2) பிரிவின் மூலம் தன்னை முன்னிலைப்படுத்தி மதங்களுக்கோ இனங்களுக்கோ எதிரான சட்டங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் பிரித்தானியப் பிரிவிக்கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யலாம் என வரையறை செய்தே தனது 152 ஆண்டுகால காலனித்துவ ஆட்சியில் இருந்து 04.02.1948 இல் சுதந்திரம் வழங்கியது. ஈழத்தமிழர்களின் இறைமையைச் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சியில் இணைத்த பொழுது ஈழத்தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த சோல்பரி அரசியலமைப்புப் பாதுகாப்பை வன்முறைப்படுத்தி 22.05.1972இல் சிறிலங்கா என்னும் ஈழத்தமிழர்களின் விருப்புப் பெறப்படாத சிங்கள பௌத்த குடியரசு ஒன்றை இலங்கைப் பாராளுமன்றத்திற்கு வெளியே நவரங்கலா என்னும் மண்டபத்தில ஈழத்தமிழர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவரைத் தவிர மற்றவர்கள் யாருமே பங்குபற்றாத அரசியல் நிர்ணய சபை மூலம் தன்னிச்சையாக அப்போதையப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரகடனப்படுத்தினார். இதனால் பிரித்தானியர்களிடம் இருந்த ஈழத்தமிழர்களின் இறைமை ஈழத்தமிழர்களிடமே மக்கள் இறைமையாக மீண்டுகொண்டது வரலாறு. அன்று முதல் இன்று வரை கடந்த 51 ஆண்டுகளாக ஈழத்தமிழ் மக்கள் தங்களின் இறைமையின் அடிப்படையில் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே அமைப்பதற்கான தங்களின் பிரிக்கப்பட முடியாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தாங்கள் பாதுகாப்பான அமைதியுடனும் வளர்ச்சிகளுடனும் கூடிய ஆட்சியை உருவாக்கித் தங்களின் இறைமையை உறுதிப்படுத்தப் போராடி வருகின்றனர். இதனை தடுப்பதற்கு ஈழத்தமிழர்களின் மேலான இனஅழிப்பு,, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்பு, உட்பட்ட அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான குற்றச் செயல்களையே தனது அரசியல் கொள்கையாகவும் கோட்பாடாகவும் கடந்த ஐம்பத்தொரு ஆண்டுகளாக ஆட்சிப்படுத்தி வருகின்றனர். இதனால் காலனித்துவத்தால் தீர்க்கப்பட இயலாத அனைத்துலக பிரச்சினைகளுள் ஒன்றாகவுள்ள ஈழமக்களின் தேசியப் பிரச்சினை ஐக்கியநாடுகள் சபையின் தன்னாட்சியுரிமையைப் பயன்படுத்த இயலாத எல்லையில் வாழும் மக்களாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணப் பாராளுமன்றப் பிரதிநிதியுமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஈழத்தமிழர்கள் சார்பில் கோரியுள்ள நிலையில் ஈழத்தமிழ் மக்கள் பலதரப்பட்ட ராஜதந்திர முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டிய காலமாக இன்றைய காலம் அமைகிறது.
இந்நிலையில் ஐக்கியநாடுகள் சபையின் பலதரப்பட்ட தொடர்பாடல் ராஜதந்திரத்தை அமைதிக்குப் பயன்படுத்துவதற்கான அனைத்துலக நாளை 24 ஏப்ரல் கொண்டாடுகின்ற செயலானது ஒருநாட்டுடனோ அல்லது இரண்டு நாட்டுடனோ நில்லாது ஆகக் குறைந்தது மூன்று நாடுகளுடனாவது ராஜதந்திரத் தொடர்புகளை மேற்கொள்ளல் அமைதியைப் பேணுவதற்கு முக்கியம் என்பதை வலியுறுத்துகின்றது. இத்தகைய ராஜதந்திர முயற்சிகளில் ஆலோசனை பெறல், கலந்து பேசுதல், கூட்டொருமைப்பாட்டுடன் செயற்படல் என்பன அமைதியை மீள்விக்க உத்திகளாக உள்ளன. இந்த முயற்சியில் மக்களின் ஆணையில் மண்ணின் உண்மைகளில் சமரசம் செய்யாது உறுதியாக நிலைத்து நின்றபடியே அனைத்துலகின் கருத்துக்கள் நெறிப்படுத்தல்களில் பொதுப்புள்ளியைக் காண்பதன் மூலம் வேலைத்திட்டங்களை உருவாக்கினாலே பிரச்சினைக்கான தீர்வுகளை அடையலாம். எனவே பலதரப்பட்ட தொடர்பாடல் அனைத்துலக முறைமையுடன் கூட்டுறவு கொள்ளுதல் மூலம் பாதிப்புற்றவர்கள் அதிலிருந்து மீளுவதற்கான அமைப்பினையும் உருவாக்க உதவும். எனவே பலதரப்பட்ட தொடர்பாடல் என்பது அனைத்துலக வாழ்வுக்கான அடித்தளம். நாடு என்கிற நிலை ஈழத்தமிழர்களுக்கு இல்லாத நிலை பிரித்தானிய காலனித்துவத்தால் ஒரு தீவுக்குள் இருந்த இரு வேறுபட்ட முடியாட்சிகளான யாழ்ப்பாண-வன்னி தமிழ் அரசுக்களின் இறைமையையும் கண்டி கோட்டே சிங்கள அரசுக்களுடன் இலங்கைத் தேசியம் என்கிற செயற்கையான தேசியத்தின் வழி ஒரே ஆட்சியில் இணைத்ததின் மூலம் 1833 இல் உருவாக்கப்பட்டது. 1948இல் தாங்கள் டச்சுக்காரர் இடம் இருந்து கைப்பற்றிய ஈழத்தமிழர்களின் இறைமையை ஈழத்தமிழரிடம் கையளிக்காது விட்டதன் வழி இன்றைய ஈழத்தமிழர் சிங்களவரின் இனஅழிப்பால் அழிவுறும் நிலை தோற்றம் பெற்றது. 2009இல் ஈழத்தமிழரின் நடைமுறை அரசு சிறிலங்காவின் இனஅழிப்பால் அதன் மக்களுக்கான பாதுகாப்பையும் அமைதியையும் வளர்ச்சிகளையும் முன்னெடுக்க இயலாத நிலை ஏற்பட்ட கடந்த 14 ஆண்டுகளிலும் எவ்வளவு தூரத்துக்கு இனஅழிப்பு எத்தகைய அரசியல் செயற்பாடுகள் மூலம் இன்று வரை தொடர்கிறது என்பதைச் சான்றாதரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலம் அதனை ராஜதந்திர முறைகளில் தடுக்கும் அனைத்துலகச் சட்டங்கள் மூலம் நெறிப்படுத்தும் ஐக்கியநாடுகள் சபையின் கடமையை அதற்கு உணர்த்தும் வகையில் பலதரப்பட்ட தொடர்பாடல்களை உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் மேற்கொள்ள ஈழத்தமிழர்களுக்கான மக்களவைகளைக் கட்டமைத்துச் செயற்பட்டாலே ராஜதந்திர முயற்சிகளால் ஈழத்தமிழர்களின் இறைமையை மீளப்பெற உதவமுடியும்.
இவ்விடத்தில் மக்களின் படைப்பாக்க-புத்தாக்க முயற்சிகளை அமைதிக்குப் பயன்படுத்தும் அனைத்துலக நாளை ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் 21இல் கொண்டாடி உலகில் வாழும் ஈழத்தமிழர்களை ஈழத்தமிழ் மக்களின் படைப்பாக்க எண்ணங்களைப் பதியும் படைப்பாக்க வங்கி ஒன்றை உருவாக்கவும் அந்த எண்ணங்கள் புத்தாக்கம் பெற்று ஈழத்தமிழ் மக்களுக்கான அமைதி வாழ்வை உறுதிப்படுத்த உதவும் நிதிநிறுவனங்களை சமூக மூலதனமாக உருவாக்கவும் உடன் முயற்சிக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு அவர்களின் நாளாந்த வாழ்வுக்கு இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை நாட்டை விட்டு புலம்பெயர வைக்கும் உள்நோக்குடன் தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முன்னையதை விட அதிக சர்வாதிகாரத்தன்மை கொண்டதாகக் கொண்டு வருகின்றனர். இதனால் தமிழர் தாயகத்தில் வாழ இயலாது புலம்பெயர்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அவர்களை மண்ணிலேயே வாழவைக்கப் புலம்பெயர் தமிழர்கள் தகுந்த பொருளாதார முன்னெடுப்புக்களை உடன் செய்ய வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.