இறுக்கமாகும் களமுனையும் பரிசோதிக்கப்படும் புதிய ஆயுதங்களும் :வேல்ஸ் இல் இருந்து அருஸ்

யேமனில் 8 வருடங்களாக இடம்பெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்தததில் சீனா முக்கிய பங்கு வகித்தது தற்போது தெரியவந்துள்ளது. யேமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும், போரளிக் குழுக்களுக்கு ஆதரவாக ஈரானும் செயற்பட்டதாக கூறப்படுகின்றது.

2014 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய போரில் 2015 ஆம் ஆண்டு சவுதி அரேபியா பங்கு கொண்ட போதும் போர் மற்றும் பொருளாதார தடைகளால் அங்கு 350,000 மக்கள் கொல்லபட்டுள்ளனர். அவர்களில் 85000 பேர் சிறுவர்கள்.

போரை முடிவுக்கு கொண்டுவரப்போவதாக அமெரிக்கா தெரிவித்தாலும் அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஆனால் ஈரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உறவினால் இந்த போரை நிறுத்தியுள்ளது சீனா.

ஆயுத விற்பனையை முக்கிய வருமானமாக கொண்டுள்ள அமெரிக்காவுக்கு இது கசப்பானதே. எனவே தான் பிராந்திய நாடுகளுடன் கூட்டணி வைத்தது தொடர்பில் சவுதி மீது தனது அதிதிருப்தியை வெளியிட்டுள்ளார் அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏயின் தலைவர் வில்லியம் பேர்ன்ஸ். அமெரிக்காவின் மிகப்பொரும் ஆயுத இறக்குமதியாளர்களில் சவுதியும் ஒன்று.

உலகில் போர்களை நிறுத்திவிட்டால் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஆட்டம்காண வைக்கலாம் என்ற திட்டம் சீனாவினுடையதாக இருக்கலாம், எனவே தான் சூடானிலும் போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவர அது எத்தனித்துள்ளது.

சூடானில் இரு ஜெனரல்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியினால் மோதல்கள் எழுந்தாதாக கூறப்பட்டாலும், கடந்த பெப்ரவரி மாதம் சூடான் அரசு செங்கடல் பகுதியில் ரஸ்ய கடற்படை தளம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்கியதும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த அனுமதி குறித்து கருத்து தெரிவித்த சூடானுக்கான அமெரிக்க தூதுவர் ஜோன் கோட்பெரி சூடான் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்திருந்தார்.

சூடானின் தற்போதைய நெருக்கடியில் வெளிநாடுகளின் தலையீடுகளையும் மறுக்க முடியாது ஏனெனில் சூடானின் விரைவு நடவடிக்கை படையினருக்கு ஒரு விமானம் ஆயுதங்களை அனுப்பியுள்ளதாக லிபியாவின் தேசிய இராணுவத்தின் தளபதி தெரிவித்துள்ளதாக த வோல் ஸ்றீற் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

இதனிடையே உக்ரைனின் களமுனை இந்த வாரமும் பரபரப்பாகவே இயங்கி வருகின்றது. முக்கிய நிகழ்வாக ரஸ்யாவின் அதிபர் விளமிடீர் பூட்டீன் கைப்பற்றப்பட்ட கேர்சன் மற்றும் டொன்பாஸ் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு கள நிலமைகளை ஆய்வு செய்துள்ள அதேசமயம், உக்ரைன் அதிபர் விளமிடீர் செலன்ஸ்கியும் போலந்து மற்றும் பெலாரூஸ் எல்லையில் உள்ள உக்ரைன் பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

நேட்டோவின் தலைவர் ஸ்ரேலன்பேர்க்கும் கடந்த வியாழக்கிழமை (20) உக்ரைனுக்கு சென்றுள்ள அதேசமயம், உக்ரைனுக்கு நேட்டோ நாடுகளால் வழங்கப்பட்ட கனரக ஆயுதங்களும் உக்ரைனுக்கு செல்ல ஆரம்பித்துள்ளன. பெற்றியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஜேர்மனி அனுப்பியுள்ள அதேசமயம், ஏனைய நாடுகள் லெபார்ட் டாங்கிகளையும் அனுப்பியுள்ளன. இந்த வாரம் மேலும் 325 மில்லியன் டொலர்கள் ஆயுத உதவியை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.

வலிந்த தாக்குதல் தொடர்பான விளக்க வரைபடம் தொடர்பான மாதிரி கட்டமைப்பை தனக்கு வழங்குமாறு செலன்கி தனது படைத்துறை தலைவரிடம் கேட்டுள்ளார்.

ஒருபுறம் உக்ரைனில் மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதலுக்கான ஆயத்தங்கள் மேற்கொளப்படுகையில் தாய்வான் களமுனையும் மெல்ல மெல்ல சூடாகி வருகின்றது. அண்மையில் தாய்வானுக்கு அமெரிக்கா 400 கைபூன் வகை கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளை அனுப்பியுள்ளதானது சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான முறுகல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளரின் பயணத்திற்கு அனுமதி மறுத்துள்ள சீனா, அமெரிக்க படை அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகத்தின் பிரதி தலைவர் கோலின் கல் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், எல்லா தரப்பினரும் தமது நவீன ஆயுதங்களை தொடர்ந்து பரீட்சித்து வருகின்றனர். சீனா WZ8 எனப்படும் ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் செல்லும் ஆளில்லாத உளவு விமானத்தை தயாரித்து வருவதாகவும், இது 100,000 அடி உயரத்தில் இருந்து உடனடியாக தகவல்களை திரட்டுவதுடன், ஏவுகணைகளையும் வழிநடத்தும் என பென்ரகனில் இருந்து அண்மையில் கசிந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவும் புதிய Minuteman III எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை இந்தவாரம் பரீட்சித்துள்ளது. இந்த புதிய ஏவுகணையின் வரவு என்பது அணுவாயுத போருக்கான படையினர் தயார் என்பதை காட்டுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அமெரிக்காவின் புலானாய்வுத்துறையினரை மேற்கோள்காட்டி த வொசிங்டன் போஸ்ட் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் ரஸ்யா புதிய இலத்திரனியல் போர் சாதனங்களை உக்ரைன் களமுனையில் பரீட்சித்து பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

Tobol எனப்படும் இந்த சாதனம் ரஸ்யா தனது செய்மதிகளை பாதுகாப்பதற்கு தயாரித்தது ஆனால் தற்போது அதனை எதிரிகளின் செய்மதிகளை தாக்குவதற்கு பயன்படுத்துகின்றது.

உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இணையத்தள செய்மதி தொலைதொடர்பு Starlink சாதங்கள் செயலிழந்து போனதற்கு ரஸ்யாவின் Tobol தான் காரணமா இல்லை ரஸ்யாவின் மற்றும்மொரு Tirada-2S எனப்படும் இலத்திரனியல் சாதனம் தான் காரணமா என்பதை அமெரிக்காவினால் உறுதிப்படுத்த முடியாது உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யாவிடம் Tobol ரக சாதனங்கள் 7 இருப்பதாகவும் அவற்றில் 3 மொஸ்கோ, கிரைமியா மற்றும் கிலினிங்கிராட் பகுதிகளில் உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிரியாவில் உள்ள ரஸ்ய படையினரை குருதிஸ் போராளிகிளின் துணையுடன் உக்ரைன் படையினர் தாக்க திட்டமிட்டுள்ளது அமெரிக்காவில் இருந்து கசிந்த தகவல்கள் மூலம் அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேசயம் அண்மையில் சிரியா மீது தாக்குதல் நடத்த சென்ற இஸ்ரேலின் ஆளில்லாத தாக்குதல் விமானங்களில் (Skylark) ஒன்று சிரியாவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. எனினும் அந்த விமானத்தில் உள்ள தரவுகளை தாம் அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானின் வான்படை தளத்தின் மாதிரி கட்டமைப்பு ஒன்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளதானது இஸ்ரேல் ஈரானை தாக்க திட்டமிடுகின்றதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. அதாவது பல களமுனைகள் வெடிப்பதற்கு தயாராக இருப்பதை தான் இந்த சம்பவங்கள் காண்பிக்கின்றன.

உலகின் அன்னிய கையிருப்பு பணமாக இருந்த அமெரிக்க டொலர் தற்போது 50 விகிதமாக குறைந்துள்ளதாக த பைனாஸ்ஸியல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது நாணயத்தின் வீழ்ச்சியை விரும்பாது. அதேசமயம் அதனை மேலும் வீழ்த்தும் முயற்சியாக ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் ராரோவின் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.

பிரேசில், நிக்கரகூவா, வெனிசுலா மற்றும் கியூபாவுக்கான அவரின் பயணம் என்பது போருக்கு அணிதிரட்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.