இலங்கையில் வறுமை நிலை குறித்து உலக உணவுத்திட்டத்தின் எதிர்வுகூறல்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்ட தொழில்வாய்ப்பு இழப்பு, உயர் உணவுப்பணவீக்கம், வரையறுக்கப்பட்டளவிலான உரம் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பவற்றின் விளைவாக வறுமை உயர்வடைந்திருப்பதுடன், அது எதிர்வரும் வருடங்களிலும் 25 சதவீதத்துக் குமேல் காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, விவசாய உற்பத்திகளின் வீழ்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மையின்மை, உயர்வான பணவீக்கம் மற்றும் பொதுக்கடன்களின் அதிகரிப்பு ஆகியவற்றின் விளைவாகக் கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தது. கொவிட் – 19 பெருந்தொற்றை அடுத்து மேலும் வலுவடைந்த பொருளாதார நெருக்கடியானது நாட்டின் அபிவிருத்தியில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியதுடன் நாடளாவிய ரீதியில் மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டிய அவசியத்தைத் தோற்றுவித்தது.

மேலும் தொழில்வாய்ப்பு இழப்பு, உயர் உணவுப்பணவீக்கம், வரையறுக்கப்பட்டளவிலான உரம் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பவற்றின் விளைவாக வறுமை உயர்வடைந்ததுடன், அது எதிர்வரும் வருடங்களிலும் 25 சதவீதத்துக்குமேல் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, போசணை வழங்கல் மற்றும் சமூகப்பாதுகாப்பு ஆகிய சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகளின் காரணமாகக் கடந்த வருடம் சிறுவர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டனர். யுனிசெப் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் 5 வயதுக்கும் குறைந்த 50,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தீவிர மந்தபோசணைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில உடனடி உதவிகளை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகக் கடந்த ஆண்டு ஜுன் – செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கென மனிதாபிமானத்தேவைகள் மற்றும் முன்னுரிமைக்குரிய விடயங்கள் செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பின்னர் அது டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டது. அதனூடாக நாட்டின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 3.4 மில்லியன் மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோன்று கடந்த ஆண்டு உலக உணவுத்திட்டத்தினால் வழங்கப்பட்ட உடனடி உதவிகள் மூலம் 1,414,637 பேர் பயனடைந்திருப்பதுடன் அவர்களில் 72,753 பேர் விசேட தேவையுடையோராவர் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.