பாகிஸ்தான்-மருத்துவமனை மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள்-விசாரணைக்கு உத்தரவு

137 Views

மருத்துவமனை மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் என்ற பகுதி உள்ளது. இங்கு நிஸ்தார் என்ற மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் இருப்பதாக அந்நாட்டின் பஞ்சாபின் முதல்வருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சம்பவம்தன்று விசாரணை மேற்கொள்ள முதல்வரின் ஆலோசகரான தாரிக் ஜமான் குஜார் என்பவர் ஆய்வு மேற்கொள்ள மருத்துவமனைக்கு சென்ற போது  அப்படி ஒன்றுமில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவர், மருத்துவமனையின் பிணவறையில் சோதனை மேற்கொள்ள முற்பட்டார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் இவருக்கு பிணவறை உள்ளே செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் மிரட்டிய பிறகே ஆய்வு மேற்கொள்ள  அனுமதி வழங்கினர்.

பின்னர் அவர் பிணவறைக்கு மேல் இருக்கும் மாடியை சோதனை செய்தபோது அங்கே சில பிணங்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து முதல்வரின் ஆலோசகரான தாரிக் ஜமான் குஜார் கூறுகையில், “இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறையில் 200-க்கும் மேற்பட்ட அழுகிய உடல்களை பற்றி எங்களுக்கு புகார்கள் வந்தது. இதனால் நாங்கள் ஆய்வு மேற்கொள்ள இங்கு வந்தோம். ஆனால் பிணவறையை கூட சோதனை செய்ய அங்கிருக்கும் ஊழியர்கள் முதலில் மறுத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறிய பிறகே பிணவறையை காட்டினர்.

இதையடுத்து மாடியில் சென்று பார்க்கையில் அங்கு ஆண்கள் , பெண்கள் என அழுகிய நிலையில் சடலங்களை கண்டோம். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் ´உடல்களை விற்கிறீர்களா?´ என்று கேட்டபோது அதற்கு மறுத்தனர். மேலும் இந்த உடல்கள் அனைத்தும் மருத்துவ படிப்புக்காக, மாணவர்களின் ஆய்வுக்காக உடல்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

இருப்பினும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஏனென்றால் அந்த உடல்கள் அனைத்தும் புழுக்களுக்கு அரித்துக் கொண்டிருக்கின்றன. மருத்துவ கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தால் அந்த உடல்கள் முறையாக அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்படி கிடப்பில் போடப்பட்டது ஏன் என்ற கேள்வி இருக்கிறது. இது குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும்” என்றார்.

இதைத்தொடர்ந்து பஞ்சாப் மாகாண முதல்வர் பர்வேஸ் இலாகி, பஞ்சாப் சிறப்பு சுகாதார மருத்துவ கல்வி செயலாளரிடம் இது குறித்து விளக்கம் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து நிஸ்தார் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், சாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார்.

Leave a Reply