சவுதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு நிலுவைச் சம்பளம்

சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தம் சென்றிருந்த நிலையில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட 40 இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, நிலுவையிலிருந்த சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளாக சுமார் 56.9 மில்லியன் ரூபா மீளப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தகவல்களின்படி, சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலன்புரிப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் ஏனைய தலையீடுகளின் ஊடாக மொத்தமாக 639,381 சவுதி ரியால்கள் (சுமார் 56.9 மில்லியன் இலங்கை ரூபா) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நிதித் தொகையானது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் தேவப்பிரிய குணசிங்க தலைமையில் பணியகத்தில் வைத்துப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக 2026 ஜனவரி மாதம் முதல் 2026 நவம்பர் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் பலனாகவே இந்த நிதி மீட்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தொழிலாளர்களின் விவகாரங்களிலும் இலங்கைத் தூதரகம் தலையிட்டு, அவர்களை விடுவித்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது