ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் 2027 ஆம் ஆண்டிற்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறியுள்ளதாகவும், மக்களுக்குப் பதில்களை விடப் பல கேள்விகளையே எஞ்ச வைத்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரான தினுக் கொழும்பகே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
2028 ஆம் ஆண்டளவில் அரசாங்கம் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ள போதிலும், அதனை எவ்வாறு செலுத்துவது அல்லது அதற்கான நிதியை எவ்வாறு திரட்டுவது என்பது குறித்து இந்த வரவு செலவுத் திட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அரசாங்கம் குழுவொன்றை நியமித்துள்ளதாகவும், உலக வரலாற்றில் இவ்வாறானதொரு விடயத்திற்குக் குழுவொன்றை நியமித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகவே வரலாற்றில் பதியப்படும்.
அத்துடன், வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை 5.2 பில்லியன் டொலரிலிருந்து 7.9 பில்லியன் டொலராக 53 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும், பணவீக்கம் 8.3 சதவீதமாக உயர்ந்து டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 337 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் 6 பில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்ட வெளிநாட்டுக் கையிருப்பு, கடந்த இரண்டு வருடங்களில் ஒரு பில்லியன் டொலரால் மாத்திரமே வளர்ச்சியடைந்துள்ளது.



