மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில், பண்ணையாளர் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு பசுக்கள் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சந்திவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான இரண்டு பசுக்களே இவ்வாறு வியாழக்கிழமை (12.11.2026) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட குறித்த இரண்டு பசுக்களின் மொத்தப் பெறுமதி 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தனது வாழ்வாதாரமாக விளங்கிய கால்நடைகள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் நீதி கோரி, பாதிக்கப்பட்ட பண்ணையாளர் மயிலத்தமடு – மாதவனை பிரதேச பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காகச் சென்றுள்ளார்.
எனினும், சுட்டுக்கொல்லப்பட்ட பசுக்களின் பெறுமதி அதிகமாகக் காணப்படுவதைக் காரணங்காட்டி, குறித்த முறைப்பாட்டைப் பதிவு செய்வதற்கு மயிலத்தமடு – மாதவனை பிரதேச பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது தொடர்பான முறைப்பாட்டை கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்நோக்கி வரும் நிலையில், தற்போது கால்நடைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளமை பண்ணையாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உடனடியாகத் தலையிட்டு, குற்றவாளிகளைக் கைது செய்வதுடன் பாதிக்கப்பட்ட பண்ணையாளருக்கு உரிய நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



