ஒமிக்ரான் – நல்லதும் கெட்டதும் – தமிழில்: ஜெயந்திரன்

ஒமிக்ரான் திரிபு

தமிழில்: ஜெயந்திரன்

ஒமிக்ரான்: நல்லதும் கெட்டதும்: கோவிட் பெருந்தொற்றைப் பொறுத்தவரையில் ஒமிக்ரான் திரிபு (omicron) யாரும் எதிர்பார்க்காத ஒரு புதுவரவு ஆகும். கோவிட்-19 தொடர்பான கடந்தகால வரலாற்றை ஒப்புநோக்கும் போது, ஒமிக்ரான் திரிபின் காரணமாக ஏற்படும் நோய்ப்பாதிப்பு அதிக தீவிரம் அற்றது என்பது தான் ஒமிக்ரான் தொடர்பாக இதுவரை வெளிவந்த ஆய்வுகளில் மிகப்பெரிய ஆய்வு முடிவாகத் சொல்லப்படுகிறது.

அது உண்மையில் நல்ல செய்தி தான். ஆனால் முன்னைய திரிபுகளை விட இந்த ஒமிக்ரான் திரிபு மிக விரைவாகப் பரவக்கூடியது என்பது ஆபத்தான செய்தியாகும். அது மட்டுமன்றி மனிதர்களின் நோயெதிர்ப்புச் சக்திக்கும், கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் இயல்பான நோயெதிர்ப்புச் சக்திக்கும் ஒமிக்ரான் திரிபு சவாலாக விளங்குகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

பொதுவாக ஒமிக்ரோன் தொற்று ஒருவருக்கு ஏற்படும் போது, அதனால் அவருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறைவாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக தடுப்பூசியை ஏற்கனவே பெற்றுக்கொண்டவர்களுக்கு இதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும். ஆனால் முழு மக்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, ஒமிக்ரான் திரிபின் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. ஒமிக்ரோன் திரிபின் காரணமாக அதிகமான மக்கள் அதன் தொற்றுக்கு உள்ளாவதன் காரணத்தால் சுகாதாரச் சேவைகளின் ஆற்றலை அது பாதிக்குமா அல்லது மருத்துவமனைகளில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும் இறப்பவர்களின் எண்ணிக்கையையும் அது அதிகரிக்குமா என்பதே தற்போது அனைவரையும் உறுத்துகின்ற கேள்வியாகும். இந்தத் திரிபின் காரணமாக தீவிர நோய்க்கு உள்ளாகும் மக்களின் தொகை உண்மையில் குறைவானதாகும்.

உண்மையில் இதற்கான தீர்வு எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் தான் இருக்கிறது. எவ்வாறான மூலோபாயங்கள் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த இதுவரை உதவியிருக்கின்றனவோ அவை அத்தனையும் ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராகவும் செயலாற்றக்கூடியவை. ஆனால் அரசுகளாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி, தனிநபர்களாக இருந்தாலும் சரி இவ்வாறான மூலோபாயங்களை அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஓமிக்ரான் தொடர்பாக விஞ்ஞானம் இதுவரை என்ன சொல்கிறது?

ஒமிக்ரான்: நல்லதும் கெட்டதும்

எந்த வைரசை எடுத்தாலும் அது தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். அதே நேரத்தில் கோவிட் 19 தொற்றுக்குக் காரணமான ஆர்என்ஏ(RNA) வைரசான  சார்ஸ்-கோவ்-2 (SARS-CoV-2) நுண்ணுயிரி திடீர் திடீரென மாற்றமடையும் இயல்பைக் கொண்டது. எவ்வளவுக்கு அதிகமாக இந்த நுண்ணுயிரி பெருக்கமடைந்து, பரவுகின்றதோ அவ்வளவுக்கு அதிகமாகத் திரிபடையும் தன்மையும் அதிகமாகிறது. பெரும்பாலான திரிபுகளால் எமக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது மட்டுமன்றி அந்தத் திரிபுகள் அந்த நுண்ணுயிரிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவையுமாகும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் இந்த நுண்ணுயிரிகளில் ஏற்படும் மாற்றம் அல்லது மாற்றங்கள் அவை மிக விரைவாகப் பரவுதற்குக் காரணமாகின்றன. இவ்வாறான மாற்றங்கள் மனிதரின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கடந்து செல்லக் கூடியவை அல்லது மிகத் தீவிர நோயைத் தோற்றுவிக்கக் கூடியவை. சில விசேட விதமான மாற்றங்களைக் கொண்ட நுண்ணுயிரிகள் திரிபுகள் (variants) என்று அழைக்கப்படுகின்றன.

தென் ஆபிரிக்காவே  சார்ஸ்-கோவ்-2 என்ற குறியீட்டைக் கொண்ட ஒமிக்ரான் திரிபை கடந்த நவம்பர் மாதம் முதன் முதலாகக் கண்டறிந்தது. தென் ஆபிரிக்காவின் மிகப் பெரிய பொதுச் சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான ‘டிஸ்கவரி ஹெல்த்’ (Discovery Health) என்ற நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு ஆய்வை வெளியிட்டது. 211,000 கோவிட்-19 சோதனை முடிவுகளை இந்நிறுவனம் ஆய்வுசெய்தது. இவற்றில் 78000 முடிவுகள் கோவிட் நோயை உறுதிசெய்திருந்தன.

தென் ஆபிரிக்காவின் கடந்த வருடத்துக்குரிய கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கையை தற்போதைய புதிய திரிபான ஒமிக்ரான் திரிபினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்ட போது, தற்போதைய நோயாளர்களின் எண்ணிக்கை 29 வீதம் குறைவாகக் காணப்பட்டது.

ஒமிக்ரான்: நல்லதும் கெட்டதும்ஆகவே தடுப்பூசிகள் ஒமிக்ரானிலிருந்து மக்களைப் பாதுகாக்குமா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. பைசர் (Pfizer/ BioNTEch mRNA vaccine)  நிறுவனத்தினால் தயாரிக்கப்படும்  எம்ஆர்என்ஏ தடுப்பூசி நோயாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய தேவையை 70 வீதம் வரை குறைக்கும் ஆற்றலைக் கொண்டது. இந்தத் தடுப்பூசி ஒமிக்ரானிலிருந்து 33 வீதமான பாதுகாப்பைத் தருகிறது.

ஒமிக்ரானுக்கு முன்னர் வந்த திரிபுகளுக்கு தடுப்பூசிகள் அளித்த பாதுகாப்புடன் ஒப்பிடும் போது, ஒமிக்ரானுக்கு எதிரான தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. ஒமிக்ரானால் ஏற்படும் நோய்த்தொற்று அதிகமாக இருப்பதற்கு இது ஒரு காரணமாக அமையலாம். பைசர் நிறுவனத்தின் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் ஒமிக்ரானுக்கு எதிராக குறைவான பாதுகாப்பைக் கொண்டிருப் பதாகவே அறியப்படுகிறது. ஆனால் இந்நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்பவர்கள் ஒமிக்ரானிலிருந்து கணிசமான பாதுகாப்பைப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கடந்த புதன்கிழமை மொடேர்ணா (Moderna) நிறுவனமும் இது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. தனது முதல் இரு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு ஒமிக்ரானுக்கு எதிரான பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும், ஆனால் தங்கள் நிறுவனம் வழங்குகின்ற மூன்றாவது ஊக்கித் (booster)  தடுப்பூசியைப் போட்டுக் கொள்பவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கிறது. ஜோண்சனும் ஜோண்சனும் (Johnson & Johnson)  அஸ்ராசெனேக்கா ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் (AstraZeneca and Oxford University) போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகளும் ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக குறைந்தளவு பாதுகாப்பையே கொண்டிருக்கின்றன.

இங்கு அடையப்பட்ட முடிவுகள் ஆக மூன்று வாரங்களில் எடுக்கப்பட்ட தரவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டே அடையப்பட்டன என்று மேற்படி ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வு நிறுவனமான ‘டிஸ்கவரி ஹெல்த்’ தமது ஆய்வுகளின் முடிவுகள் தொடர்பாக எச்சரிக்கையை வெளியிட்டது. அதே நேரம் களநிலைமை இந்த முடிவுகளுடன் முற்றிலும் ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

“எல்லா வயதைச் சேர்ந்த நோயாளர்களும் ஒப்பீட்டளவில் குறைவான காலத்தையே மருத்துவமனையில் செலவிடுகிறார்கள்’ என்று விற்வாட்டர்ஸ்ரான்ட்  (Witwatersrand) என்ற இடத்திலுள்ள பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பொதுச்சுகாதார மருந்து நிபுணரான ஹர்ஷா சோமாறூ (Harsha Somaroo) தெரிவித்தார். தென் ஆபிரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த ஒமிக்ரான் அலையின் மையமாகத் திகழ்கின்ற கவுட்டெங்கிலுள்ள (Gauteng) சுகாதாரப் பிரிவுக்கு ஒரு ஆலோசகராகவும் சோமாறூ பணியாற்றுகிறார்.

“மேற்குறிப்பிட்ட விடயங்கள் உண்மையாக இருந்த போதிலும், பொதுமக்களின் சுகாதாரத்துக்குக் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு திரிபாகவே ஒமிக்ரான் இன்னும் காணப்படுகின்றது. இதற்கான காரணம் என்னவென்றால் ஒமிக்ரான் தொற்றினால் ஏற்படும் நோயின் தீவிரத்தன்மை குறைவாக இருந்த போதிலும், அதன் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பு வீதம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. இந்த கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இந்நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் மிக அதிகமான எண்ணிக்கை இதுவாகும். ஒவ்வொரு வாரமும் நோயாளர்களின் எண்ணிக்கை 300 வீதம் அதிகரித்துக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது” என்று சோமாறூ மேலும் தெரிவித்தார்.

“கடந்த மாதமே ஒமிக்ரான் திரிபு முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. அதற்குள் அது உலகம் முழுவதும் பரவிவிட்டது. உண்மை நிலை என்னவென்றால் ஒமிக்ரான் பல நாடுகளுக்கு ஏற்கனவே பரவிவிட்டது. ஆனால் எல்லா நாடுகளும் அதனை இன்னும் இனம் காணாமல் இருக்கலாம். அமெரிக்காவில் மீண்டும் ஒரு தடவை கோவிட்டினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அதன் 30 மாகாணங்களில் ஏற்கனவே ஒமிக்ரான் பரவிவிட்டது” என்று உலக சுகாதார தாபனத்தின் (World Health Organization) தலைவரான ரெட்ரோஸ் அதானம் கெப்ரியேசுஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்தார். அமெரிக்காவைப் பொறுத்த வரையில் அங்கு கோவிட்டால் பாதிக்கப்படுவோர் டெல்ற்றா திரிபினாலேயே (delta variant) அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதே நேரம் கோவிட் திரிபின் காரணமாக அங்கு மிக அதிகமான நோயாளர்கள் மருத்துமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படலாம். குளிர்காலத்தில் வழமையாகச் சுவாசப் பிரச்சினைகள் (respiratory infection) காரணமாக அதிகளவானோர் பாதிக்கப் படுவதனால் நிலைமை இன்னும் மோசமாகலாம்.

ஒமிக்ரான் கட்டுப்படுத்தப்பட்டால் எப்படியிருக்கும் கட்டு மீறினால் எப்படியிருக்கும்

ஓமிக்ரான் பரவும் வீதம் மிக மிக அதிகமாக இருப்பதாக அறியப்படுகிறது. அப்படியாயின் இதுவரை கோவிட்டிலிருந்து தம்மைப் பாதுகாத்தவர்களும் இத்தொற்றுக்கு ள்ளாகும் ஆபத்து அதிகமாக இருக்கிறது. டெல்ற்றா திரிபுடன் ஒப்பிடும் போது அல்பா திரிபு (alpha variant) 25 – 50 வீதம் அதிகமாகப் பரவக்கூடியதாகும். இந்த அல்பா திரிபு கோவிட்டின் ஆரம்ப வடிவமான சார்ஸ்-கோவ்- 2 என்ற ஆரம்ப வடிவத்தை விட 50 வீதம் அதிகமாகப் பரவக்கூடியதாகும்.

தடுப்பூசிகளை ஏற்கனவே பெற்றுக்கொண்டவர்களைக்கூடத் தாக்கும் ஆற்றலை ஒமிக்ரான் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

“இங்கே கவலையை ஏற்படுத்தும் விடயம் என்னவென்றால் ஓரளவு நோயெதிர்ப்புச் சக்தியைக் கொண்டவர்களில் அதன் தாக்கம் குறைவாகக் காணப்படலாம். ஆனால் ஒமிக்ரானின் தொற்றும் தன்மை மிக அதிகமாகக் காணப்படுகிறது. அப்படிப் பார்க்கும் போது இதுவரை கோவிட்டின் பாதிப்புக்கு உள்ளாகாதவர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றார்களே அங்கங்கெல்லாம் ஒமிக்ரான் தொற்று ஏற்படப்போகிறது.

இதுவரை எந்தவிதமான கோவிட் தொற்றும் இன்றி, தடுப்பூசிகளும் இன்றி, இந்தப் பெருந்தொற்றுக் காலம் முழுவதும் தம்மைப் பாதுகாத்துக் கொண்டவர்களையும் ஒமிக்ரான் தாக்கப் போகிறது” என்று வட கரோலைனா பொதுச் சுகாதாரக் கல்லூரியில் (University of North Carolina) நோய்ப்பரம்பல் துறையில் (epidemiology) பேராசிரியராகப் பணியாற்றுகின்ற ஜஸ்ரின் லெஸ்லர் (Justin Lessler) தெரிவித்தார்.

அமெரிக்காவில் தற்போது அதிகமாகக் காணப்படும் திரிபான டெல்ற்றா திரிபின் இடத்தை ஒமிக்ரான் எடுக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் புத்தாண்டு பிறக்கின்ற போது, இந்தத் திரிபு அதிகளவான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தொற்று எந்தத் திசையை நோக்கிச் செல்லப் போகின்றது என்பதை எதிர்வரும் வாரங்களில் அறிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கும்

அதிகமாகப் பரவும் ஒமிக்ரானின் இந்த இயல்பின் காரணமாக கோவிட் தொற்றின் எதிர்காலம் இரு பாதைகளில் பயணிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இவற்றுள் ஒன்று, மருத்துவமனைச் சிகிச்சைகள் அவசியமற்ற தொற்றுகள் அமெரிக்காவில் அதிகரிக்கலாம். அல்லது ஒமிக்ரானின் காரணமாக அதிகளவான தொற்றுகள் ஏற்பட்டு பெரும் எண்ணிக்கையிலானோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்படலாம். இறப்புகளும் ஏற்படலாம்.

“தீவிரத்தன்மை குறைந்த நோய்க்கு எண்ணிக்கையில் அதிகமானோர் பாதிக்கப்படலாம். அப்படியென்றால் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுக்கே மருத்துவமனைச் சிகிச்சைகள் தேவைப்படும். இது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய முதலாவது நிகழ்தகவு” என்று மாயோ சிகிச்சை நிலையத்தில் (Mayo Clinic) தொற்று நோய் ஆய்வாளரான அண்ட்ரூ பாட்லி (Andrew Badley) தெரிவித்தார்.

இரண்டாவது நிகழ்தகவு என்னவென்றால், நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகலாம். ஏற்கனவே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதோர் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதால் தொற்றுக்கு உள்ளாவோரின் மொத்த எண்ணிக்கை அதிகமாகும் என்று பாட்லி மேலும் தெரிவித்தார். மருத்துவசிகிச்சைகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் மொத்த எண்ணிக்கை அதிகமாவதன் காரணத்தால் அதிக எண்ணிக்கையானோருக்கு மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படலாம்.

நோய்த்தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அப்படியான ஒரு சூழல் ஏற்பட்டால் அது சாதகமாக இருக்கும். ஒமிக்ரான் திரிபின் பரவலைக் கட்டுப்படுத்த தீவிரப் பொதுச்சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் நோய்த்தொற்றுக்கு உள்ளாவோருக்கான சிகிச்சையை வழங்குவதற்கு மருத்துவமனைகள் போதிய வளங்களைக் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஓமிக்ரான் தொற்றுப்பரவலின் தன்மை இடத்துக்கிடம் மாறுபடலாம்

ஓமிக்ரான் தொடர்பாகத் தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட விடயங்கள் முக்கிய தரவுகளாகும். ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகள் வேறு கோவிட்-19 அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றன. ஆகவே சில விடயங்கள் அவற்றுக்குப் பொருந்தப் போவதில்லை.

தென் ஆபிரிக்க மக்களுக்கு இது கோடை காலம். அதே நேரம் அமெரிக்காவுக்கோ இது குளிர்காலமான படியால் மக்கள் இனி அதிகமாக வீடுகளுக்குள் முடங்கிவிடுவார்கள். அமெரிக்காவில் வாழுகின்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 72 வீதமானோர் கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகளை இதுவரை பெற்றிருக்கிறார்கள். ஆனால் தென் ஆபிரிக்காவில் 38 வீதமானோர் மட்டுமே அவ்வாறான தடுப்பூசிகளை இதுவரை பெற்றிருக்கிறார்கள்.

இருப்பினும் பல அலைகளாக வந்த வெவ்வேறான திரிபுகளின் தொற்றுக்கு தென் ஆபிரிக்க மக்கள் உட்பட்டிருக்கிறார்கள். ஆகவே ஏறத்தாழ 75 வீதமான மக்கள் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம். இது அவர்களுக்கு ஒருவிதமான பாதுகாப்பை வழங்குகிறது என்று சோமாறூ தெரிவித்தார்.

உண்மையில் தொற்றுக்கள் ஏற்படுவதற்கும் பின்னர் தொற்றுக்கு உள்ளானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கும் அல்லது இறப்பதற்கும் இடையே கணிசமான அளவு கால இடைவெளி உண்டு. ஒமிக்ரான் தொடர்பாக தென் ஆபிரிக்கா பெற்றுக்கொண்ட ஒரு மாத கால அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டு, இந்தத் திரிபு ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் தொடர்பாக ஒரு முழுமையான காட்சியமைப்பை உருவாக்க முடியாது.

அமெரிக்காவைப் பொறுத்த வரையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டோர் வீதம் பொதுச்சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள், நாடு தழுவிய ரீதியில் கோவிட் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை போன்ற விடயங்கள் பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடுகின்றன.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இந்தப் பெருந்தொற்றுத் தொடர்பான அனுபவங்களில் பல வேறுபாடுகள் உண்டு என்று லெஸ்லர் கூறினார். மூன்றாவது ஊக்கித் தடுப்பூசிகள் உள்ளடங்கலாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் அதிகமாக உள்ள பகுதிகளுடன் ஒப்பிடும் போது, தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் குறைவாக உள்ள பகுதிகளில் ஒமிக்ரானின் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இருக்கும்.

கோவிட்-19க்கு எதிரான பாதுகாப்பு நடைமுறைகள் ஒமிக்ரானுக்கும் பொருந்தும். ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்போர் குறைவாகவே உள்ளனர்

கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஊக்கித் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுமே ஒமிக்ரானுக்கு எதிராகத் தம்மைப் பாதுகாக்க மக்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கையாகும். கைகளைக் கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கோவிட் சோதனைகளை மேற்கொள்ளல், தொற்றுக்குள்ளானோரைப் பின்தொடர்தல், தொற்றுக்குள்ளாகும் போது தனிமைப்படுத்தல் போன்ற பொதுச் சுகாதார நடவடிக்கைகள் இன்னும் பயன் தரக்கூடியவையாகவே இருக்கின்றன.

தொற்றுக்கு உள்ளாவோரை எடுத்துக்கொள்வோமானால் தற்போது அதற்கான ஒன்றுக்கு மேற்பட்ட சிகிச்சைத் தெரிவுகள் இருக்கின்றன. வைரசைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் மிக விரைவில் சந்தைக்கு வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியான மாத்திரைகள் வரும் போது இன்னும் குறைவான எண்ணிக்கை யானோருக்கே மருத்துவச்சிகிச்சைகள் தேவைப்படும்.

ஒமிக்ரான்: நல்லதும் கெட்டதும்ஆனால் கோவிட் பெருந்தொற்று இரண்டு வருடங்களையும் கடந்து நீண்டு செல்வதன் காரணத்தினால் மக்கள் பொறுமை இழப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆர்வமும் மக்கள் நடுவில் படிப்படியாகக் குறைந்துசெல்கிறது. ‘ஏனைய திரிபுகளுடன் ஒப்பிடும் போது, ஒமிக்ரான் திரிபு ஆபத்து இல்லாதது’ என்ற செய்தி பலர் கவனக்குறைவாக நடப்பதற்கும் காரணமாக அமையக்கூடும். பொதுச்சுகாதார அதிகாரிகளைப் பொறுத்தளவில் இந்தச் செய்தியை மக்களுக்குக் கொண்டுசெல்வது சவால்நிறைந்ததாகும்.

‘தொற்றுக்கு உள்ளானால் கூட எங்களில் அதிகமானோருக்கு அதிக ஆபத்து இல்லை’ என்று சிந்திக்கும் மனப்பாங்கை எவ்வாறு கையாளலாம்? ஆனால் தொற்றுகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாகி, தொற்றுக்குள்ளானவர்களால் மருத்துவமனைகள் நிரம்பும் போது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை எட்டக்கூடிய ஆபத்து இருக்கின்றது.

ஒமிக்ரான் திரிபு தொடர்பாக நாம் இதுவரை அறிந்துவைத்திருக்கும் விடயங்கள் ஆரம்ப கட்டத்திலே தான் இருக்கின்றன. அதன் பரவும் தன்மை தொடர்பாகவும் அதன் தீவிரத்தன்மை தொடர்பாகவும் நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கும் விடயங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆகவே மக்கள் எதற்கும் தயாரான நிலையில் இருப்பது அவசியமானது. ஒமிக்ரான் திரிவு தொடர்பாக நிச்சயமற்ற விடயங்கள் பல இருக்கின்றன. இத்திரிபு தொடர்பாக நாம் ஏற்கனவே அறிந்த விடயங்கள் கூட உறுதியற்றவையாகவே இருக்கின்றன” என்று லெஸ்லர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நன்றி: வொக்ஸ்.கொம்

Tamil News