அணிசேராக் கொள்கை ஈழத்தமிழர் அரசியலாக்கப்பட வேண்டிய 2022 – சூ.யோ. பற்றிமாகரன்

ஈழத்தமிழர் அரசியலாக்கப்பட வேண்டிய 2022

சூ.யோ. பற்றிமாகரன்

அணிசேராக் கொள்கை ஈழத்தமிழர் அரசியலாக்கப்பட வேண்டிய 2022: அக்டோபர் 21 இல் இலங்கையின் தலைநகரமாகிய கொழும்பில், ஐந்து நட்சத்திர சீனச் செங்கொடியினை ஏற்றிச் சீனத் தேசிய  நாள்  கொண்டாடப்பட்டது. சீனத் தேசியக் கொடியை இலங்கையில் ஏற்றி, விழாவைத் தொடக்கி வைத்து, சீன உலோகவியல் கூட்டுத்தாபனச் செயற்திட்டச் செயலாளரர் குயிய் சொங்மிங் (Cui Songming) உரையாற்றினார்.

ஈழத்தமிழர் அரசியலாக்கப்பட வேண்டிய 2022தமது சீனத் தேசிய நாள் உரையில், “காலம் பறந்தோடுகின்றது.. இன்று தேசிய நாள். இந்நாளில் எங்கள் தாய்நாட்டுக்கு மேலும் வளமையும் பலமான அரசு அமைந்து, 2021இற்கான எங்கள் இலக்குகளை விரைவில் அடைய எமக்கு அந்த அரசு உறுதுணை செய்யட்டும். எமக்கு புதிய ஏழுச்சி தரும் தேசிய நாளாக இந்தத் தேசியநாள் அமைய வாழ்த்திட விரும்புகின்றோம். சீனாவின் எழுச்சிப் பலம் வெறுமனே எங்களுடைய வெளிநாட்டுச் செயற்திட்டங்களுக்கு வெறுமனே பொருளாதார தொழில்நுட்ப ஆதரவை மட்டும் தரவில்லை. எங்களுடைய நாட்டைக் குறித்த பெருமிதத்தையும், பெருமையையும் எமக்கு அளிக்கிறது. சிறிலங்காவின் 50 நீண்ட ஆண்டுக் கனவான வேகப்பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதைச் சீனாவின் பேராற்றலும், சீனத் தொழிலாளர்களின் தியாகம் நிறை உழைப்பும் நனவாக்கிச் சிறிலங்காவின் வேகப் பாதைகளைச்  சீனாவின் தரத்திற்குத் தரம் உயரவும் செய்துள்ளது. இதற்குச் சீனாவுக்கும்  சீன உழைப்பாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.” என்றார்.

சிறிலங்கா மண்ணில் சீனத்தேசிய தினம் கொண்டாடப்படும் அளவுக்குச் சீனா இலங்கையின் தெற்கில் பொருளாதாரச் செயற்திட்டங்களில் ஈடுபட்டு வருவது உலகறிந்த விடயம். சீன உலோகவியல் கூட்டுத்தாபனச் செயற்திட்டச் செயலாளரர் குயிய் சொங்மிங்கின் உரை, தமிழ் மக்களுக்குப் பல பாடங்களை அளிக்கிறது. ஒன்று தேசப்பற்றுள்ளவர்களாகச் சீனர்கள் இருப்பதே சீனதேசம் பேராற்றல் கொண்டெழ முதற்காரணம் என்பதை மனதிருத்துகிறது. இரண்டாவது தொழிலாளர்கள் தேச உருவாக்கத்தின் பலம் என்பதை உணர்த்தி, அனைத்து நிலையிலும் தொழிலாளர்களைச் சமத்துவத்துடன் நடத்தினாலே அத்தேசம் பேராற்றல் கொண்டெழும் என்பதை இவரின் உரை நெஞ்சிருத்துகிறது. மூன்றாவதாக தேசத்தையும், தேசத் தலைமையையும் தமது பெருமைக்கான காரணம் எனத் தனிமனிதனைத் தேசத்துடன் இணைத்தே சீனர்கள் வாழும் தன்மையை இந்த உரை மிகத்தெளிவாக நமக்கு வெளிப்படுத்தியது.

2022 ஐ சீனத்தூதரக அதிகாரிகளின்  2021 மார்கழி மாத யாழ்ப்பாணத்துக்கான நேரடி வருகையுடன் தொடங்கவுள்ள ஈழத்தமிழர்கள் தங்கள் தமிழீழத் தேசத்தை மீள் உறுதிப்படுத்தும் தேச உருவாக்கத்தைச் செய்வதற்குத் தங்கள் வரலாற்றுத் தாயகத்தின் மேலும், அதற்காகத் தன்னலமில்லாத முறையில் உழைக்க முற்பட்டு வருபவர்கள். மேலும், எத்தகைய நன்றியுணர்வையும், பற்றுணர்வையும், பங்களிப்பு உறுதிப்பாட்டையும் கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பதை தெளிவாக்குகிறது.

சீனாவின் வேகப் பாதை அமைப்புச் செயற்திட்டத்தில் தொடக்கம் முதலே பணியாற்றி வரும் கவ்சீகூ (Hou Shehu)  தனது உரையில், மற்றொரு முக்கிய செய்தியை எடுத்துரைத்தார். அவர் “குடும்பம் என்பது நாட்டின் சிறுபகுதி. எண்ணற்ற குடும்பங்களின் கட்டமைப்பே நாடு. சீனாவின்  மண்டலங்களும், பாதைகளும் தொடக்க முயற்சி (Belt & Road initiative))  வெளிநாட்டுச் செயற்திட்டத்தில் நாங்கள் தூதும், பொறுப்பும் கொண்டவர்களாகத் தேவையேற்படின் நாட்டுக்குப் பணியாற்றுவதில் உயிரையும் இழக்கக் கூடிய உறுதியுள்ளவர்களாவும் உள்ளோம். எங்களுடைய கடின உழைப்பால் சிறிலங்காவின் சுற்றுலாத்துறை மலர்ச்சி அடைவதையும், நாட்டின் உட்கட்டுமானம் உறுதி பெறுவதையும் பார்க்கையில், பெருமகிழ்ச்சியாக உள்ளது”    என்பதே அச்செய்தி. இன்றைய காலகட்டத்திற்கு ஈழமக்கள் ஆழமாகவும் அழுத்தமாகவும் நெஞ்சில் பதிக்க வேண்டிய செய்தியிது.

குடும்பம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில், அவர்களின் தாயகத்தில் இருந்து அந்நியப்பட்ட தனி வளர்ச்சிக்குரிய ஒன்றாகவே கருதப்பட்டு, குடும்பத்தை உயர்த்துவது என்ற தலைமை நோக்குடனேயே அவர்களின் உழைப்பையும், ஆற்றல்களையும் கட்டமைத்துச் செயற்பட்டு வருகின்றனர். இதுவே தமிழினத்தின் அடிமைத்துவ வாழ்வுக்கான அடிப்படையாக அமைகிறது. சீனர்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தை நாட்டின் சிறுபகுதியாகக் கண்டு, நாட்டிற்காக உயிரையும் இழத்தல் என்பது தனது குடும்பத்திற்கான பெருமையாக உள்ளது என்கிற, உள்ள உணர்வுடன் செயற்படுவதே சீனாவின் பேராற்றலுக்கான அடித்தளமாக அமைகிறது. இந்தப் பின்னணியில் ஐப்பசியில் சீனாவின் நிலாத் தினம் (Moon Day)  இலங்கையில் பௌத்தர்களின் ஐப்பசி போயா தினம் என்னும் முழுநிலா வழிபாட்டு நாளுக்கு அடுத்த நாளே இலங்கையில் உள்ள சீனர்களின் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

இலங்கையில் வாழும் இந்த சீன மக்களின் கொண்டாட்ட உறவாடல்கள், இலங்கையில் சீன மக்களுடனும் சிங்கள, தமிழ் மொழி பேசும் மக்கள் இணைவுற்ற வளர்ச்சிக் காலமாகவே இலங்கையின் எதிர்காலம் இனித்தொடரும் என்கிற எதார்த்தத்தை உலகுக்கு உணர்த்துகின்றன. இதனை இலங்கையையும் உள்ளடக்கிய இந்தியத் துணைக்கண்டத்தின் பிராந்திய மேலாண்மையாகிய இந்தியா ஏற்றுக்கொள்வதில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. இதனால் இந்திய – சீன நேரடி வலுப்போட்டி இலங்கைத்தீவில் இனித் தொடர்கதையாகவே அமையும்.

இதுவரை இலங்கையின் தெற்கில் சீனாவும், வடக்கில் இந்தியாவும் என்கிற ஒரு பிரிப்புடன் அமைந்திருந்தது சீன – இந்திய வலுப்போட்டி.  2022 இல் வடக்கிலும் கிழக்கிலும் கூட சீன இந்திய வலுப்போட்டி தெற்கில் சீனா, வடக்கில் இந்தியா என்ற எண்ணப்பிரிவு இன்றியே நேரடி வலுப்போட்டியாகத் தொடரப்போகிறது. இந்த உண்மை யாழ்ப்பாணத்திற்குச் சீனத்தூதரக அதிகாரிகள் விஜயத்தால் உறுதியாகியுள்ளது.

ஈழத்தமிழர் அரசியலாக்கப்பட வேண்டிய 2022இந்நேரத்தில் சீனாவின் உலகளாவிய இன்றைய கொள்கையாகிய ‘பொது வளர்ச்சியை ஊக்குவித்தல்’ என்னும் அடிப்படையிலான சீன முயற்சியாகவே ஈழத்தமிழர் களுடனான சீனர்களின் அணுகு முறையை எடுத்து நோக்க வேண்டியுள்ளது. ஐரோப்பாவின் கிறிஸ்தவ பண்பாட்டு வழியான அரசியல் தத்துவமான ‘பொது நன்மை’யை ஊக்குவித்தல் என்பதை ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கள் தூதரங்கங்கள் மூலம் அந்த அந்த நாட்டு அரசுகளுடனான தொடர்பாடல்கள் வழியாகவே முன்னெடுத்து வருகின்றன.

இதனால் 1945இல் இரண்டாவது உலகப் போரின் பின்னர் இனி ஒரு உலகப்போர் வராது தடுப்பதற்கான அரசியல் தந்திரோபாயத்தை வழங்க அனைத்துலக நாடுகளின் மன்றமும், பொருளாதார ஆதரவினை வழங்க அனைத்துலக நாணயமாற்று நிதியமும், உலக வங்கியும் 1945இல் அமெரிக்கா தோற்றுவித்த புதிய உலக  ஒழுங்கின் மூலம் கட்டமைக்கப்பட்டன.

1945 முதல் 2021 வரையான 76 ஆண்டுகால உலக வரலாற்றில் உலகப்போர் என்பது உள்நாட்டுப் போர் என்கிற புதிய வடிவினைப் பெற்றது. இதன் அடிப்படையில் உலகெங்கும் உருவான உள்நாட்டுப்  போர்களால் கோடிக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளும், உடைமை அழிப்புகளும், நாளாந்த வாழ்விழப்புக்களும் உலக இனங்களின் வரலாறாகியுள்ளது என்பது வெளிப்படையான உண்மை. இந்த உலக அமைதியீனத்திற்கு முடிவைத்தாற்போல் கோவிட் 19 பெருந்தொற்று இன்று வரை மனிதகுல நாச சக்தியாக எல்லா நாடுகளையும் தாக்கிச் செயலிழக்க வைத்து வருகிறது. கூடவே சீனாவின் உலகளாவிய முதலீடுகள், உருவாகி வரும் 2022  புதிய உலக ஒழுங்கில் உலகின் பலம் பொருந்திய அரசாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டு வருகிறது சீனா. சீனாவின் இன்றைய அரச அதிபர் ஜி ஜிங் பின்,  அரசுக்களுடான இராசதந்திர மட்ட உறவாடலைவிட மக்களுடன் மக்களின் நலனை மேம்படுத்தும் உறவாடலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வெளிவிவகாரக் கொள்கையை முன்னெடுக்கிறார்.

இலங்கையின் பொது வளர்ச்சியை ஊக்குவித்தல் சீனக்கொள்கையாகவும், இலங்கைக்கான முதல் உதவி வழங்கல் இந்தியக் கொள்கையாகவும், உதவிகள் வழி சீன வலுவை மட்டுப்படுத்தல் அமெரிக்கக் கொள்கையாகவும், சந்தை முறைமைகளை உறுதிப்படச் செய்தல் ஐரோப்பியக் கொள்கையாகவும் அமையும் 2022இல் அணிசேராக் கொள்கையை முன்னெடுப்பதன் மூலமே ஈழத்தமிழர்கள் தங்களுக்கான அனைத்துலக உதவிகளை உறுதிப்படுத்த முடியும். 

Tamil News