13க்காக கையெழுத்து, இன்று இறுதிச் சுற்று பேச்சு- மனோ

இன்று இறுதிச் சுற்று பேச்சு

இன்று இறுதிச் சுற்று பேச்சு: இலங்கையில் வாழும் வடகிழக்கு, முஸ்லிம் தேசிய இனங்களுடன் கரங்கோர்த்து, சிங்கள சகோதர மக்களுக்கும் ஒரு செய்தியை சொல்லி, மலையக மக்களின் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கும் உயர்த்த வேண்டிய வரலாற்று கடமை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது என தமிழ்  முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மேலும் “சமீபத்து இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர்களின் விவகாரங்களை தொடர்ந்தும் தோட்ட, பிரதேச, மாவட்ட பிரச்சினைகளாக மட்டும் முடக்காமல், ஏனைய சகோதர சமூகங்களது பிரச்சினைகளைப்  போல் தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கு கொண்டு செல்லதே, இன்றைய தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டு  செயற்பாட்டில் எங்கள் நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.

இதை சரியாக புரிந்துகொண்டு மலையக இளைய தலைமுறையும், படித்த தலைமுறையும் எமது கரங்களை பலப்படுத்த வேண்டும்.

இன்று 31ம் திகதி கொழும்பில் த.தே.கூ தலைவர் சம்பந்தன் இல்லத்தில் நடைபெறும் இறுதிச் சுற்றுபேச்சுகளில் இனிய இறுதி முடிவு எட்டப்படும் என நான் நம்புகிறேன்” என  மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில், மனோ எம்.பி மேலும் கூறுகையில்,

“இந்த கூட்டு செயற்பாட்டில் நாம் இடம்பெறாமல் இருந்திருந்தாலும்கூட நான் இதை வேறு அடிப்படைகளை செய்தே இருப்பேன். ஐநாவின் அவைக்கு மலையக விவகாரங்களை கொண்டு செல்ல தீர்மானித்துள்ளேன் என நான் மூன்று மாதங்களுககு முன்பே சொன்னேன். இன்று இந்தியாவுக்கு ஞாபகப்படுத்தி, அமெரிக்கா, ஐரோப்பிய ஐ.நா என சகோதர மக்களுடன் கரங்கோர்த்து மலையக மக்களும் பயணிக்க வேண்டிய காலம் உதயமாகியுள்ளது.

இன்றைய நடவடிக்கை இலங்கையின் உற்ற நட்பு நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதில் ஆரம்பிக்கிறது” என மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News