வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது
வட கொரியாவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் உரையாற்றிய அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் அணு ஆயுத கையிருப்பை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆயுதப்படையின் ஆண்டுவிழாவையொட்டி இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் காட்சிப்படுத்தப்பட்டது.
2017ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் வட கொரியா தனது மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
சர்வதேச அளவில் இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்காவால் பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இராணுவ அணிவகுப்பில் உரையாற்றிய அதிபர் கிம் ஜாங் உன், “நாட்டின் அணு ஆயுத திறனை வலுப்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்,” என்றார்.
மேலும் எந்த நேரத்திலும் தனது திறனை காட்ட அணு ஆயுதப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கிம் தெரிவித்துள்ளார் என வட கொரிய செய்தி முகமையான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.