மறு அறிவித்தல் வரை மின் துண்டிப்பு இல்லை

மறு அறிவித்தல் வரை மின் துண்டிப்பு

மறு அறிவித்தல் வரை திட்டமிடப்பட்ட மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நேற்று வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

இதற்கமைய, மறு அறிவித்தல் வரை மின் துண்டிப்பு அமுலாக்குவதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த ஆணைக்குழு நேற்று பிற்பகல் கூடியது.

இதன்போது மறு அறிவித்தல் வரை திட்டமிடப்பட்ட மின் துண்டிப்பை மேற்கொள்ளப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்சார கட்டமைப்பில் கேள்வி மற்றும் விநியோகத்திற்கிடையில் 300 மெகாவோட் இடைவெளி உள்ள நிலையில், அதனை பெற்றுக்கொள்வதற்கு மின்சார சபை எந்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், இதனால் மார்ச் மாதம் அளவில் மின்சார துண்டிப்பை மேற்கொள்வதற்கு நேரிடும் என குறிப்பிட்டார்.

மின்சார சபையின் செலவில் எரிபொருள் இறக்குமதி செய்யப்படுமானால், வலுசக்தி அமைச்சு என்ற வகையில் அதனை இலவசமாக களஞ்சியப்படுத்தி, அவர்களுக்கு தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் இலவசமாகவே விநியோகிப்பதற்கு தயாராகவுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Tamil News