கம்போடியாவில் கடற்படைத்தளம் அமைக்கவில்லை – சீனா

கம்போடியாவில் சீனா கடற்படைத்தளம் அமைப்பதாக அமெரிக்காவின் நாளோடு ஒன்று இந்த வாரம் வெளியிட்ட தகவலை சீனா மறுத்துள்ளது.

சீனாவுக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளும், ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. இரு நாடுகளும் பல வழிகளில் ஒத்துழைப்புக்களை பேணி வருகின்றன. ஆனால் நாம் அங்கு கடற்படைத் தளத்தை அமைக்கவில்லை என தெரிவித்துள்ளார் சீனாவின் வெளிவிவகாரப் பேச்சாளர் சவோ லிஜியான்.

கிழக்கு ஆபரிக்க நாடு ஒன்றில்  ஒரு கடற்படைத்தளம் மட்டுமே எமக்கு உள்ளது. ஆனால் அமெரிக்காவுக்கு உலகம் முழுவதும் 800 தளங்கள் உள்ளன. உலகில் மிக அதிகளவான பாதுகாப்பு செலவீனத்தை கொண்ட நாடான அமெரிக்கா பல போர்களில் ஈடுபட்டு வருகின்றது.

ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் ஈடுபடுவது மட்டுமல்லாது தனது விமானங்களையும், கப்பல்களையும் அனுப்பி அச்சுறுத்தியும் வருகின்றது. உலக நாடுகளிடம் தவறான தகவல்களை பரப்புவதிலும் அமெரிக்கா முன்னனி வகிக்கின்றது.

தாய்லாந்தின் வளைகுடாவில் உள்ள றீம் கடற்படைத் தளத்தை நாம் கம்போடியா அரசுக்காகவே புனரமைத்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, றீம் கடற்படைத் தளத்தை சீனா தரமுயர்த்தி வருவதாகவும், அதனை சீனா கடற்படையினர் பயன்படுத்தவுள்ளதாகவும் கடந்த திங்கட்கிழமை (6) வொசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News