PLOTE, TELO தவிர்ந்த கட்சிகளுடன் கூட்டணி இல்லை: சுமந்திரன் தெரிவிப்பு

PLOTE எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் , TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தை தவிர வேறு கட்சிகளுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனது பாரம்பரிய கூட்டணிக் கட்சிகளுக்கு மேலதிகமாக ஏனைய தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை நிராகரிப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கடந்த 26 ஆம் திகதி இணைய வழியில் நடைபெற்ற அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக மாத்திரம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருப்பதாகவும் தேர்தல் முறைமையின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமையை சரியாக பயன்படுத்தும் நோக்குடனேயே இது தொடர்பில் அரசியல் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாரம்பரிய பங்காளிகளுக்கு மேலதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த கூட்டணியை உருவாக்கும் கோரிக்கையை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருப்பதாக வௌியாகியுள்ள செய்தியை, தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா நிராகரித்துள்ளார்.

அவ்வாறான ஒரு தீர்மானம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசியல் குழு உறுப்பினர்கள் சகலரும் தங்களுடைய கருத்துகளை கூட்டத்தில் முன்வைத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தை மாதம் 7 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மத்திய குழு கூட்டத்தில் கலந்துரையாடி, இது தொடர்பிலான தீர்மானத்தை எடுத்து பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்பதாகவே இணக்கம் காணப்பட்டதாக தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழ் மக்களின் நன்மை கருதி தற்போது தமிழ் கட்சிகள் சேர்ந்தே பயணிக்க வேண்டும் எனவும் அதற்கு மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை தான் ஏற்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஷ்வரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற 6 பேரின் கூட்டணிக்கு மாவை சேனாதிராஜா தலைமை வகிப்பதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லையென கலந்துரையாடப்பட்டதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.