ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை: அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் கொரிய குடும்பம் 

அவுஸ்திரேலியாவின் வடக்கு குவின்ஸ்லாந்தில் வசித்து வரும் கொரிய குடும்பம் ஒன்றின் நிரந்தர விசாவுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்களது 7 வயது மகனான சியோங்ஜே லிம் ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் இது அவுஸ்திரேலியாவுக்கு சுமையாக இருக்கும் என விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2013ம் ஆண்டு கொரியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு  யூஜின் யாங் மற்றும் ஹியூசின் லிம் அவர்களது பெண் குழந்தையுடன் புலம்பெயர்ந்திருக்கின்றனர். இந்த சூழலில், கடந்த 2014ம் ஆண்டு சியோங்ஜே லிம் இவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக அவுஸ்திரேலியாவில் பிறந்திருக்கிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிராந்திய புலம்பெயர்வு திட்டத்தின் (Regional Sponsored Migration Scheme) கீழ் நிரந்தரமாக வசிப்பதற்காக விண்ணப்பித்திருக்கின்றனர்.

இதையடுத்து கடந்த ஜூலை 2021ல் சியோங்ஜே லிம்மின் மருத்துவ சிக்கல்களால் இவர்களது விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 2021 ல் நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டிருந்த நிலையில், மீண்டும் விசா நிராகரிக்கப்பட்டதாக இந்தாண்டு ஜூலை மாதம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இக்குடும்பம் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

“சியோங்ஜே ஆஸ்திரேலியாவில் பிறந்தவன், அவனுக்கு ஆங்கிலமே தாய்மொழி. அவனுக்கு அறிமுகமில்லாத பெற்றோரது நாடான கொரியாவுக்கு திரும்பினால், மொழி திறன் மற்றும் சமூக திறன்களை மீட்டெடுக்கும் முய்றசியில் இருக்கும் சியோங்ஜேவுக்கு அது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்,” என சியோங்ஜேவின் தாயான யூஜின் change.orgயில் பதிவேற்றியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருக்கிறார். இந்த மனுவுக்கு ஆதரவாக 27 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ள டேவிட் கோலின்ஸ் என்பவர், “ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை நான். நான் வரி செலுத்துகிறேன், நான் வாக்களிக்கிறேன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வரிச்செலுத்தபவர்களுக்கான சுமையல்ல. அரசியல்வாதிகளே வரி செலுத்துபவர்களுக்கான சுமையாக இருக்கின்றனர்.