இனவாத சிந்தனைகளை கொண்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாச தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்று கூற அருகதையற்றவர் – சி.சிறிதரன்

அடிப்படையில் இனவாத சிந்தனைகளையும் எண்ணங்களையும் கொண்டுள்ள இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தமிழர்கள் தங்களுக்குள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று சொல்வதற்று அருகதையற்றவர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகர வட்டாரத்துக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளையின் புதிய  உறுப்பினர்களை தெரிவுசெய்யும் கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (டிச. 30) இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடிப்படையாகவே இனவாத எண்ணங்களையும் தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் அபகரிப்பதற்கு துணையாக இருக்கின்ற  விஜயதாச ராஜபக்ஷ தமிழர்களை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்த அருகதையும்  அற்றவராவார்.

நாளையுடன் (இன்றுடன்) முடிவடைகின்ற இந்த ஆண்டிலே முக்கியமான பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

உலகை அச்சுறுத்திய கொரோனாவிலிருந்து  ஓரளவு நாடு விடுபட்டிருக்கிறது.

இலங்கையில் மிகப்பெரிய வெற்றியோடு அதாவது போரையும் போர்க் காரணங்களையும் மையப்படுத்தி, சிங்கள மக்களிடமிருந்து மிகப்பெரிய வாக்குகளை பெற்று,  ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ அதே சிங்கள மக்களால் அடித்து விரட்டப்பட்ட மிகப்பெரிய  வரலாற்றையும் இந்த ஆண்டு பதிவாக்கியிருக்கிறது.

அதேபோல, ‘உலகத்தில் பல்வேறுபட்ட நெருக்கடிகள் தோன்றியிருக்கின்றன. உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மிகப் பெரும் போர் ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது’ என்றும் ‘தமிழர்கள் தங்களுக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை கலைந்து ஓரணியில் வரவேண்டும்’ என்றும் இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.

நாங்கள் எப்போதும் ஒற்றுமையாகவே எமது உரிமைகளுக்காக போராடி வருகின்றோம். இதில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்குவது அவர்களே தான்.

தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து புத்த விகாரைகளை அமைப்பதற்குரிய அமைச்சராக அப்போது இருந்தவர், விஜயதாச ராஜபக்ஷ.

தற்போது குருந்தூர் மலையிலே விகாரை அமைக்க வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையிலும், அந்தக் கட்டளையை மீறி மிகப்பெரிய விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொலிஸார் தடுக்கவில்லை, நீதித்துறை தடுக்கவில்லை.

இவ்வாறு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்தல், பூர்வீக வழிபாட்டு இடங்களில்  விகாரைகள் அமைத்தல் போன்ற இனவாத செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற விஜயதாச ராஜபக்ஷ தமிழர்களை ஒற்றுமைப்பட்டு வர வேண்டும் என்று கூறுவதற்கு எந்தவித அருகதையும் அற்றவர்.

தமிழர்களாகிய நாங்கள் எப்பொழுதும் ஒற்றுமையாக தான் இருக்கின்றோம். எங்கள் உரிமைகளுக்காகத்தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்; போராடிக் கொண்டிருக்கிறோம்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா தலைமையில் அரசிடம் கையளித்திருக்கிறோம். அதே தீர்வுத் திட்டத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,  மட்டக்களப்பை சேர்ந்த சிவில் சமூக அமைப்பு என்பனவும் கையளித்திருக்கின்றன.

வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களையும் ஒரு தேசிய இனமாக அங்கீகரித்து, அவர்களுக்கான ஒரு தீர்வுத் திட்டத்தை வழங்க வேண்டும் என தலைவர் பிரபாகரன் முஸ்லிம் தலைவர்களோடும் இராஜ தந்திரிகளோடும்    பேசியிருக்கின்றார்.

நாங்கள் ஒற்றுமையாக ஒன்றுபட்டுத்தான் இருக்கின்றோம். ஆனால், அடிப்படையில் இனவாத சிந்தனைகளையும் எண்ணங்களையும்  கொண்டுள்ள விஜயதாச ராஜபக்ஷ, நிமால் சிறிபால டி சில்வா, சந்திரிக்கா, ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம்  பிளவுகளை ஏற்படுத்த முனைகின்றனர் என்றார்.

முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த. குருகுல ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.