மனித உரிமை ஆர்வலர்களைக் குறி வைக்கும் என்ஐஏ – சர்வதேச அமைப்புகள் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களை குறிவைத்து தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய சோதனையைப் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

கடந்த சில நாட்களில் ஸ்ரீநகர் மற்றும் டெல்லியில் குறைந்தபட்சம் ஒன்பது இடங்களில் என்ஐஏ சோதனைகளை நடத்தியுள்ளது.  பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறி இந்த விசாரணைகள் நடைபெற்றுள்ளன.

சில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நலத்திட்டங்களை வழங்குவதாகக் கூறி நிதி சேகரிக்கின்றன. ஆனால், பணத்தைப் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிக்க பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டில்,   சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டில்,புகழ்பெற்ற மனித உரிமைப் பாதுகாவலர் குர்ராம் பர்வேஸ், காணாமல் போன நபர்களின் பெற்றோர் சங்கத்தின் (ஏபிடிபி) அலுவலகம், கிரேட்டர் காஷ்மீர் செய்தித்தாளின் அலுவலகம், ஜேகே யடீம் அறக்கட்டளை ஆகியவை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,“இந்தச் சோதனைகள் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்துக் மாற்றுக் கருத்தினரை அடக்குவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியாக உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்” என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் பொதுச் செயலாளர் ஜுலி வெர்ஹார் குற்றம்சுமத்தியுள்ளார்.

சமீபத்தில், மத்திய அரசு தங்களைக் குறிவைப்பதாகக் குற்றம் சாட்டிய அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவிலிருந்து வெளியேறி அதன் இந்திய அலுவலகங்களை மூடியது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் “என்ஐஏ அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை  ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி, சித்ரவதைக்கு எதிரான உலக அமைப்பு, மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பான மனித உரிமைச் செயற்பாட்டாளர்களைப் பாதுகாப்பதற்கான ஆய்வகம், மற்றும் ராஃப்டோ அறக்கட்டளையும் இந்தச் சோதனைகளைக் கண்டித்துள்ளன.