இலங்கையில் பரவும் கொரோனா, அதிக வீரியம் கொண்டதா?

இலங்கையில் கோவிட் 19 தொற்று காரணமாக இதுவரை 10,424 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் இந்த மாத ஆரம்பத்தில் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் கண்டறியப்பட்ட நிலையில், அன்றிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவ ஆரம்பித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம்காணப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்தும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கையில் தற்போது பரவி வரும் கோவிட்-19 வைரஸானது, மிகவும் வீரியம் கொண்டது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.

இந்த தகவலைத் தொடர்ந்து இலங்கையில் தற்போது பரவிவரும் வைரஸானது, ‘B.1.42’ என்ற பிரிவை சேர்ந்த வல்லமை மிக்க வைரஸ் என சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் சஞ்ஜீவ முனசிங்க தெரிவிக்கின்றார்.

இலங்கையில் இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட வைரஸ்கள், B.1, B.2, B 1.1, B.4 ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவை எனக் கூறும் அவர்,

இந்த வைரஸ், கடந்த காலங்களில் பரவிய வைரஸை விடவும் அதிக வீரியம் கொண்டமையினால், குறித்த வைரஸ் அதிவேகமாக பரவும் வல்லமையை கொண்டுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.