பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் உயிருடன் எரித்துக் கொலை

407 Views

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் ஆதிக்கச் சாதியினரால் அடித்து உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாநிலத்தின் அமெத்தி தொகுதியின் பதோயா கிராமத் தலைவர் சோட்கா தேவியின் கணவர் அர்ஜுன் கோரி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலில் நிலவிய போட்டியின் காரணமாக அவர் எரித்துக்கொல்லப்பட்டதாகக் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த வியாழன் அன்று காய்கறி வாங்கி வருவதாகக் கடைக்குச் சென்ற அர்ஜுன் வீடு திரும்பவில்லை என்றும் பிறகு கிருஷ்ணகுமார் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக அவரது மகன் சுரேந்தர் கூறியுள்ளார்.

அர்ஜுன் அந்தத் தொகுதியில் வலுவாகக் காலூன்றியிருந்தது பிடிக்காத அவருடைய எதிரிகள், தேர்தல் போட்டி காரணமாக அவரைக் கொன்றுள்ளதாகவும் சுரேந்தர் தெரிவித்துள்ளார்.

அர்ஜுனுடைய வாயில் துணியைத் திணித்து, அவரை அடித்து உதைத்த பிறகு தீ வைத்ததாகவும் சம்பந்தப்பட்டவர்களில் நான்கு பேரின் பெயர்களைக் காயம்பட்ட நிலையில் அர்ஜுன் கூறியதாகவும் சுரேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன் இரவு சிகிச்சைக்காக அமெத்தி மருத்துவமனையில் அர்ஜுன் அனுமதிக்கப்பட்டிருந்தார். மறுநாள் காலை லக்னோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அர்ஜுன் உயிரிழந்தார் என்று காவல் கண்காணிப்பாளர் தினேஷ் சிங் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

குடும்பத்தினர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து நபர்களில் ஒருவர் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர் என்றும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி இணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகின்ற போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வன்முறைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் படுகொலை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply