”நெல்சன் மண்டேலா” அனைத்து நாடுகள் தினம் – புலவர் சிவநாதன்

தென்னாபிரிக்காவின் தேசத்தந்தையிம்
மண்ணில் உதித்த மாதவ நாளை
எண்ணத்திருத்திட எமக்கெலாம் மீண்டுமோர்
பொன்னாள் உதித்தது! புத்துயிரளித்தது!
தன்னம்பிக்கையின்.. தளரா உறுதியின்..
சின்னம் உலகின் சிறைகளை யுடைத்திடக்
கண்ணைத் திறந்து காசினிக் குழந்தையாய்
மண்ணில் உதித்த நாள் எம்முன்னே விரிந்தது!

ஐ நா சபையின் அவையினர் கூடி…
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு…
தம் நா கூட்டித் தரணிக்கு அறிவித்த
நன்னாள் ஜுலை பதினெட்டு! வாழ்வின்
தந்நாள் அனைத்தையும் தரணிக்காய்த் தந்த
தென்னாபிரிக்காவின் தேசப்பிதா மகர்
‘மடிபா’ நெல்சன் மண்டேலா தினமென!

விலங்குகள் அறுந்து விடுதலைபெற்ற
நிலந்தனில் வாழும் நிரந்தர அமைதிக்காய்
மலர்ந்தகாவியம் மண்டேலா காவியம்!
இழந்த மானிட உரிமைகள் மீட்டு…
இணைந்து வாழ்கின்ற இனிய தேசத்தை
அடைய ஏங்கிய மக்களின் கூட்டத்தை
அணிதிரட்டிய தலைவனே மண்டேலா!

unnamed 3 ''நெல்சன் மண்டேலா'' அனைத்து நாடுகள் தினம் - புலவர் சிவநாதன்

 

இருபத்து ஏழு ஆண்டுகள் சிறையின்
இருள்கக்கும் நான்கு சுவர்களின் நடுவே..
அடைபட்டுக் கிடந்தும்…அகிலத்தை நிரப்பிய
உருவத்தை உளத்தில் உருப்போடும் நாளிது!
கருவுற்ற இலக்கைக் கருதிய குறிக்கோளை
இறுகத் தன்னுயிரில் ஏந்தியே தனது
இறுதிப் போர்வரையும் இயங்கிய மானிடத்
துருவத்தைத் துதிக்கும் தூய தினமிது!

மானிடவர்க்கத்தின் மதமோர் அன்பென்னும்
வானுயர் கொள்கையை வையத்தில் நிகழ்த்திடும்
பான்மைகொள் பாதையில் நடக்கின்ற தலைவர்கள்
தோன்றிட முடியும் துவளாதீர் என்று
சான்று பகர்ந்த சரித்திர நாயகன்
வாழ்ந்த வரலாற்றை வழிமொழியும் நேரமிது!
கூனிநடக்கும் குவலயத்தை ‘நிமிர்க!’ என்று
கூவியழைக்கக் கொடியுயர்த்தும் வாரமிது!

ஆந்தைகளும் பருந்துகளும் சுயநலத்தின் பிசாசுகளும்
ஆண்டுவரும் உலகொன்றை அடியோடு மாற்றுகின்ற
மாந்தரியல் தன்னை மானிடர்க்கு வழங்குகின்ற
மாந்திரிகமொன்றைப் பதிவு செய்யும் வேளையிது!
காந்தியவன் கண்ட கறுப்பு வெள்ளைக் காழ்ப்புகளில்
நீந்தியவோர் தேசத்தில் நிகழ்வுற்ற கொடுமைகளை…
‘ஆண்டான் அடிமை’யெனும் அந்நியத்தின் இழிவுகளை…
ஏந்தியவர் செய்த நோன்புகளின் விளைவாக
நேர்ந்த வியாபகமே நெல்சன் மண்டேலா!

f ''நெல்சன் மண்டேலா'' அனைத்து நாடுகள் தினம் - புலவர் சிவநாதன்
‘அப்பாதைட்’ எனும் அநீதியின் பிடியில்
சப்பாத்துத் துடைத்துச் சகதியிற் குளித்துக்
கப்பிலும் கழுவிலும் காடையர் சிறையிலும்
ஒப்பாரிவைத்து உதிரம் சிந்திய…
அப்பாவிக் கறுப்பு இனத்தைக் காத்திட…
‘கேப்’ மாநிலத்தின்.. ‘முவசோப்’ பகுதியில்…
‘தெம்பு’ அரச குடுமபத்தின் மரபினில்…
தப்பாமல் வந்தவ தரித்தவர் மண்டேலா!

 

தோலின் நிறத்தால் ஆளும் இனமென
ஞாலம் தன்னைக் காலின் கீழ் மதித்த
மேலைத்தேய மேத்திரக் கூட்டத்தின்
வேலைக்கூலியாய் நாளைக் கழித்தவர்
கோலம் மாறிடக் கொள்கை இயற்றிய
தோழர் வரிசையிற் தொடங்கினார் அரசியல்!
வாதம் செய்யும் வல்லமையோடு
வாழ்வினைத் தனது தேசத்திறகாக்கினார்!

இலட்சியத்தின் விளைவால் இந்த
இளைய மண்டேலா இழந்தவை எத்தனை?
விலத்திவைத்த விடுதலை வீரனாய்…
விலங்கு மாட்டிய கைதியாய் மாறினான்!

Mandela robben ''நெல்சன் மண்டேலா'' அனைத்து நாடுகள் தினம் - புலவர் சிவநாதன்

காலம் மாறிற்று! ஞாலமும் மாறிற்று!
பாலம் விர்ந்து பரிந்துரையாயிற்று!
சிறையில் இருந்தவன் சிறகினை விரித்தான்!

அறையின் கதிரொளி அகிலத்தை நிறைத்தது!
கலையும் கவிதையும் சிலையும் எழுந்தன!
அரசுகள் ஆட்சிகள் பட்டாடை விரித்தன!
நிறைவாய் மானிடம் நிலவொளி பாய்ச்சிற்று!
நித்திய ஒளியில் இறைநிழ்ல தேடிற்று!

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடித்த
இனந்தனை நேசித்த இனிய இதயத்தைக்
கறுப்பு ஜுலையின் கனத்த உணர்வோடு…
கண்கள் கசிய வணங்கி யமைகிறேன்!