உலக வனவிலங்கு தினம்: நாம் வாழும் பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க இன்றே அணிதிரள வேண்டும் | ஆர்த்தீகன்

அணிதிரள வேண்டும்

உயிரினங்களைப் பாதுகாக்க அணிதிரள வேண்டும்

உலகில் உள்ள தாவரங்களையும், விலங்குகளையும் பாதுகாக்கும் நோக்கில் உலக காட்டு உயிரினம் தொடர்பான நாள் ஒவ்வொரு வருடமும் மார்ச் 3 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.

இந்த நாள் தொடர்பான பரிந்துரையை தாய்லாந்து அரசே முதலில் முன்வைத்திருந்தது. அதன் பின்னர் அதன் முக்கியத்துவம் கருதி, ஐக்கிய நாடுகள் சபையானது தனது 68 ஆவது பொதுக் கூட்டத் தொடரில் 2013 ஆம் ஆண்டு அதனை ஏற்றுக் கொண்டு அறிவித்திருந்தது.

உலக வனவிலங்கு தினம்காட்டு வாழ் உயிரினங்களானது எமது சூழல், கல்வி, கலாச்சாரம், மரபியல் விஞ்ஞானம், பொருளாதாரம் மற்றும் மருத்துவம் எனப் பல துறைகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. மனிதர்களின் நல்வாழ்வுக்கும், எமக்கான தேவைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்வதற்கும் அவை இன்றியமையாதவை. எமது பூமிப் பந்தின் அழகிற்கும் அவை முக்கியமானவை.

இந்த நாளில் நாம் எவ்வாறு காட்டு வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பது (Convention on International Trade In Endangered Species of Wild Fauna and Flora) மற்றும் அவற்றை எவ்வாறு அழிவில் இருந்து மீட்டு எடுப்பது போன்ற விடயங்கள் முக்கியமாக பேசப்படுவதுண்டு. உயிரினங்களை எவ்வாறு பாதுகாத்தல் என்பது தொடர்பில் மக்களுக்கு கற்பிப்பதற்கும், அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் மிகவும் முக்கியமானது.

உலக வனவிலங்கு தினம்பெருமளவான உயிரின வகைகள் வாழ்ந்தாலே (Biodiversity) எமக்கு அது அனுகூலமானது. நாம் எமது மருத்துவ மற்றும் உணவுத் தேவைக்கு அவற்றைத் தான் நம்பியிருக்கின்றோம். ஒரு உயிரினம் முற்றாக அழியும் போது, அதன் மரபணு தொடர்பான தகவல்களையும் (Gene pool), அதன் பயன்களையும் நாம் இழக்கின்றோம்.

பல மருத்துவப் பொருட்கள் தாவரங்களிலும், விலங்குகளிலும், நுண்ணங்கிகளிலும் இருந்து அறியப்பட்டு, பின்னர் ஆய்வுகூடங்களில் தயாரிக்கப்படுகின்றன. முதலில் கண்டறியப்பட்ட பென்சிலின் என்ற கிருமி கொல்லி Fungus என்னும் நுண்ணங்கியில் இருந்து அறியப்பட்டது. அஸ்பிரின் என்ற வலி நீக்கியும் Willow tree எனப்படும் மரத்தில் இருந்து பெறப்பட்டதே. தமிழ் பாரம்பரிய மருத்துவத்துறையிலும் பெருமளவான மருந்துப்பொருட்களின் உறைவிடம் தாவரங்களும் விலங்குகளுமே.

தற்போதைய உலக ஒழுங்கில் சனத்தொகை அதிகரிப்பு, அவர்களின் வாழ்க்கைத்தர அதிகரிப்பு என்பன ஏனைய உயிரினங்களுக்கான வாழ்விடம், உணவு, மற்றும் ஏனைய தேவைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அதேபோல  எமது நவீன வாழ்க்கை முறைகளினாலும், அதிக மக்கள் தொகையினாலும் ஏற்படுத்தப்படும் சூழல் மாசுபடுதலானதும், உலகம் வெப்பமயமாதலும் பல உயிரினங்களை அழிவு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளில் இந்த தினம் கொண்டாடப்படுவதுண்டு. 2018 ஆம் ஆண்டு உலகில் உள்ள சிங்கம் மற்றும் புலி (Big Cats: Predators Under Threat) இனங்களை பாதுகாத்தல் என்ற திட்டம் முன்வைக்கப் பட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டு கடலில் வாழும் உயிரினங்கள் தொடர்பான (Life Below Water: For People and the Planet) சிந்தனை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த வருடம், சூழலில் அழிவு நிலையில் உள்ள முக்கியமான உயிரினங்களை மீட்டு எடுத்தல் (‘Recovering key species for ecosystem restoration) என்ற கருப்பொருள் முன்வைக்கப் பட்டுள்ளது.

உலக வனவிலங்கு தினம்உலகில் உள்ள உயிரினங்களில் 8,400 உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாகவும், 30,000 உயிரினங்கள் அழிவடையும் ஆபத்தில் உள்ளதாகவும் இயற்கையை பாதுகாகப்பதற்கான அனைத்துலக கூட்டமைப்பு (IUCN) தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் கணிப்புகளே தவிர, உண்மையான எண்ணிக்கை இதனை விடப் பல மடங்கு அதிகம் எனக் கூறப்படுகின்றது.

பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள், மீன்கள், பூச்சிகள் போன்ற இனங்களைச் சேர்ந்த விலங்குகளில் 68 விகிதமானவை கடந்த 1970 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது முற்றாக அழிந்து விட்டதாக  2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பூமியில் வாழும் உயிரினங்கள் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 50 வருடங்களில் தற்போது உள்ள உயிரினங்களில் 25 விகிதமானவை முற்றாக அழிந்துவிடும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

எமது பூமி தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்துவதால், இதனை நாம் கொண்டாடுவது அவசியம். ஆனால் எவ்வாறு கொண்டாடுவது?

அடுத்த தலைமுறையினருக்கு இது தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதே முக்கியமானது. சிறுவர்களுக்கு இது தொடர்பில் தகவல்களை வழங்கலாம்; பாடசாலைகளில் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.  இந்த உயிரினங்களில் நாம் தங்கி வாழுகின்றோம் என்ற கருத்தை அவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும்.

உலக வனவிலங்கு தினம்உயிரினங்களின் அழிவு என்பது உலகிற்கும், அங்கு வாழும் மக்களுக்கும் அழிவைத்தரும் என அழிவின் விழிம்பில் உள்ள உயிரினங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவை தொடர்பான வர்த்தகத்தை தடை செய்யும் அனைத்துலக அமைப்பின் செயலாளர் இவோனி ஹிகிரோ தெரிவித்துள்ளார். இந்த விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாக்கும் சக்தி எம்மிடம் உண்டு. எனவே அதனை நடைமுறைப்படுத்த இந்த நாள் எமக்கு அறிவூட்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கான தீர்வு என்ன?

நாம் இந்தப் பூமிக்கும், நாம் வாழும் சூழலுக்கும் அதிக சேதங்களை ஏற்படுத்தாமல் வாழ வேண்டும். சூழலைப் பாதுகாக்குமாறு அரசுகளுக்கும், நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் அதற்காக இணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்?

உலக வனவிலங்கு தினம்எமது பகுதிகளில் உள்ள நிகழ்வுகளில் கலந்து கொண்டு, காட்டு வாழ் தாவரங்கள் மற்றும் விலங்குகள் குறித்து அறிந்து கொள்ளுதல். எமது நேரத்தையும், பணத்தையும் அதற்காக சிறிது செலவிடல். இது தொடர்பில் அரசுகளுக்கும், நாடுகளுக்கும் அறிக்கைகளை அல்லது மனுக்களை, அனுப்பலாம்.

காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகளை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய மக்களுக்கும் பகிரலாம். இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தலாம் (You can use the hashtags #WorldWildlifeDay and #DoOneThingToday to join in with the global conversation).

எதனை நாம் செய்தாலும், நாம் தனியாகச் செய்யப்போவதில்லை. இந்த உலகில் உள்ள  மக்களில் மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் எம்முடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

Tamil News