கோட்டாவுக்கு எதிரான பிரேரணை – த.தே.ம.முன்னணியினர் கையொப்பமிட்டமை சந்தர்ப்பவாதம்

கோட்டாவுக்கு எதிரான பிரேரணை

கோட்டாவுக்கு எதிரான பிரேரணை: கோட்டாபய ராஜபக்சே அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கையொப்பமிட்டமை சந்தர்ப்பவாதத் தனமான நடவடிக்கை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  ஒன்றில் கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன்,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸை பொறுத்தவரையில் சிங்களத் தரப்பில் நடக்கின்ற விடயங்களை தமிழர் தேசத்துக்கு சம்பந்தம் இல்லை என்று கடந்த காலங்களில் கூறினர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் எமது பிரச்சினைகள் பேசப்படும் போது ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கையை தான் இவர்கள் செய்கின்றார்களே தவிர இதன் ஊடாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் மாற்றம் ஏற்படாது என்றனர். அதை நான் தவறு என்று கூறவில்லை. ஆனால் தற்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்து கையெழுத்து வைப்பதென்பது அவர்கள் ஆட்சி மாற்றத்தை தான் வேண்டி நிற்கின்றார்களோ என்று கேள்வியை எழுப்புகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றாலும் கூட அடுத்த கட்டம் என்ன என்பது தொடர்பாக சஜித் பிரேமதாசவுடன் பேசினார்களா? எவ்வாறு அடுத்த கட்டத்தை கொண்டு போகப் போகிறார்கள்? நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அடுத்ததாக என்ன செய்யப்போகின்றார்கள்? போன்ற கேள்விகளுக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. இதனை தெளிவுபடுத்த வேண்டியது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கடமை. இது ஒரு சந்தர்ப்பவாததனமான நடவடிக்கை.

ஆட்சி மாற்றம் தேவையில்லை. ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு எதுவும் ஆக போவதில்லை என்று கூறியவர்கள் இன்று ஆட்சி மாற்றம்தான் வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களுக்கு ஏதாவது கிடைப்பது தொடர்பாக பேசி இருக்கின்றார்களா? இது ஒரு சந்தர்ப்பவாத தனமான நடவடிக்கை என்றார்.