எரிபொருள் தட்டுப்பாடு: கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் ஏனைய நெருக்கடி நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

விவசாயத்தில் இலங்கையின் இரண்டாவது மாகாணமாகவுள்ள கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக எரிபொருள் நெருக்கடி மற்றும் பசளை இல்லாமை காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை ஒரு இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இடைப்போக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதை நிலையில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்காத நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் பற்றாக்குறை மட்டுமல்லாது எரிபொருட்களின் விலையேற்றம் போன்ற காரணத்தினால் விவசாய நடவடிக்கைகளுக்கான இயந்திரங்களை பாவிப்பதற்கு அதிகளவான கூலி அறவிடப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் 5000ரூபாவுக்கு இதுவரையில் பெறப்பட்டு வந்த பசளை தற்போது 40000ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதன் காரணமாக அவற்றினை கொள்வனவு செய்து விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அதன் அறுவடை அதிகளவு விவசாயிகளை பாதூக்கும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகள் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் பாரியளவிலான அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.