13ஆம் அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்த தயார்: சஜித் மீண்டும் உறுதி

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகரான இசபெல் கெத்தரின் மார்ட்டினுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் நீடித்த இன நல்லிணக்கம் தொடர்பாக இரு தரப்பினரும் இங்கு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாக காணப்படுகின்றது என்று குறிப்பிட்டு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இருதரப்பு சந்திப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினும் இலங்கை எதிர்கொள்ளும் பேரண்டப் பொருளாதார சவால்கள் குறித்தும், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுக்கு பின்னர் நாட்டை பாதித்த சமூக பொருளாதார சவால்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையில் தற்சமயத்தில் தாக்கத்திற்குள்ளான மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு துரித நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் வாழ்வாதார மீட்சிக்கு முன்னுரிமை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், நாடாக மீண்டும் தலை நிமிர்வதற்கும், சேதமடைந்த சொத்துக்களை புனர்நிர்மாணம் செய்வதற்கும் உலகளாவிய ரீதியாக உதவிகள் கிடைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.