சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்று மக்களிடம் மன்னிப்புக் கோரிய இந்தியப் பிரதமர் மோடி

92 Views

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்று மக்களிடம் மன்னிப்பு

இந்தியாவில்  கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குக் காரணமாக இருந்த, சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்று மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார். இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே நேரலையில் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றியிருந்தார். இந்தியாவில் ஒரு வருடத்ததைக் கடந்தும் போராட்டம் நடத்திய விவசாயிகள் தற்போது வெற்றி பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது இந்த மூன்று சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று உறுதி அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வியாபாரம், விவசாயிகள் விலை உறுதி ஒப்பந்தம் மற்றும் சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது நிறைவேற்றப்பட்டன. அந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி இந்த மூன்று சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.

இந்த மூன்று சட்டங்கள் காரணமாக விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயரும் என்பது மத்திய அரசின் வாதமாக இருந்தது. ஆனால், விவசாய சங்கத்தினர் தங்களது விளைபொருட்களில் பெரும் வணிக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிப்பார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் போராட்டத்தை தொடங்கினார்கள்.

இந்த போராட்டம் ஒரு வருடத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில் தான் இன்று காலை 9 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அந்த நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அவர் அறிவித்தார்.

மேலும் விவசாயிகளின் நலன் காக்க இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், விவசாயிகளின் துன்பங்கள் என்ன என்பது தனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் இந்த சட்டத்தின் நலன்கள் பற்றி விவசாயிகளின் ஒரு பிரிவினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தாங்கள் தோல்வி அடைந்து விட்டதாகவும். இதற்காக நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த மூன்று சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

எல்லைகளில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் இந்த அறிவிப்புக்கு உற்சாக வரவேற்பு தெரிவித்துள்ளனர். குருநானக் பிறந்த நாள் விழா தினத்தின்போது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதே நேரம், ஓராண்டாக விவசாயிகள், பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளனர். எனவே, போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்று மக்களிடம் மன்னிப்புக் கோரிய இந்தியப் பிரதமர் மோடி

Leave a Reply