கொரோனா: இறுதி நேரத்தில் விமானப் பயணத்தை இரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்

இறுதி நேரத்தில் விமானப் பயணத்தை இரத்து செய்யும்

கொரோனாவுக்கான பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதால் இறுதி நேரத்தில் விமானப் பயணத்தை இரத்து செய்யும் வங்கதேச புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 550 ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனால், விசா காலம் முடிவடைவதற்கு முன்னதாக வேலைச் செய்யும் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு திரும்ப முடியுமா என்ற கவலையில் வங்கதேசத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

“நான் ஜனவரி 26ம் திகதி துபாய் செல்ல திட்டமிட்டிருந்தேன். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனாவுக்கான சோதனையை 48 மணி நேரத்துக்கு முன்னதாக மேற்கொண்டேன். அப்போது தொற்று இல்லை என வந்தது,” எனக் கூறும் ஜூமதின் அகமது என்ற வங்கதேச தொழிலாளிக்கு பின்னர் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் விதிகளின் படி, விமானத்தில் ஏறுவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதனடிப்படையில்  ஜூமதின் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தான் கடைசி நேரத்தில் விமானத்தை இரத்து செய்வதாக கூறுகிறார். இந்த கடைசி நேர பயண இரத்து அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் ஜூமதினின் விசா வரும் பிப்ரவரி தொடக்கத்துடன் முடிவடைய உள்ள நிலையில், விசா காலாவதியாகும் முன்னர் அவர் துபாய்க்கு செல்வது தற்போது சிக்கலாகி உள்ளது.

ஜூமதின் எனும் வங்கதேச புலம்பெயர் தொழிலாளியின் நிலையை அந்நாட்டு தொழிலாளர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியா, இலங்கையை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களும், சுற்றுலா பயணிகளும் எதிர் கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News