கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கோவிட்19 நோயாளர்கள்

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கோவிட்19

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கோவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக படிப்படியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. 2021 டிசம்பர் மாதமளவில் 1622 நோயாளர்களும் 17 மரணங்களும் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2022 ஜனவரி மாதமளவில் 2500 புதிய தொற்றாளர்களும் 25 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி மருத்துவர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

கோவிட் 19 நிலைமைகள் தொடர்பில் கிழக்கு மாகாண நிலவரம் பற்றி ஊடகங்களுக்கு இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

உலக நாடுகள் உட்பட இலங்கையிலும் கோவிட்19 இன் புதிய வகை பிரழ்வான ஒமிக்ரோன் இதற்கு காரணமாக இருக்கலாம். இக் கிருமியானது நோயாளிக்கு வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்பட்ட போதிலும் மிக விரைவாக ஏனையோருக்கு தொற்றக் கூடியது. எனவே இவ்வகை தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள ஏற்கனவே நாம் கூறுகின்ற பொதுவான கட்டுப்பாடுகளான சமூக இடை வெளிகளை பேணல், சரியான முறையில் முகக் கவசம் அணிதல்,அடிக்கடி கைகளை சவர்க்காரம் இட்டு கழுவுதல் அத்தோடு தேவையற்ற ஒன்று கூடல்களை தவிர்த்தல், மரண வீடுகள்,சடங்குகள்,சமய சடங்குகள் ,திருமண வைபவங்களின் போது முகக் கவசங்களை அணிந்து செயற்படுவது அவசியமாகும்.

மேலும் மூன்றாவது தடுப்பூசியான பைசர் தடுப்பூசியை 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அத்துடன் 12_19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் பைசர் தடுப்பு மரூந்தினை பெற்றுக் கொள்வதும் சிறந்ததாகும் தற்போது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும் நடை பெற்று வருகிறது.

தடுப்பூசியில் ஏற்கனவே இருந்த ஆர்வம் மக்கள் மத்தியில் குறைவடைந்து ஆதாரமற்ற பொய் வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பியமை தடுப்பூசியினை பெறுவதில்  பின் நிற்கும் நிலைமை காணப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து மரண எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலை   ஏற்படும்“ என்றார்.

Tamil News