”மீண்டும் வெற்றி பெற உதவ வேண்டும்” சீன அதிபரிடம் கெஞ்சிய ட்ரம்ப்

உய்குர் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினத்தவர்களின் மனித உரிமைகளை மறுக்க கூடாது. அவர்களை தடுப்புக் காவலில் வைப்பது, ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தடை விதிக்க வழிவகை செய்யும் ‘உய்குர் மனித உரிமைகள் சட்டத்தில்’ கடந்த புதன்கிழமை அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார், ஆனால் அவர்களைக் கண்காணிக்க தடுப்பு முகாம்களை அமைக்க சீன அதிபருக்கு ஆதரவு அளித்தவரே ட்ரம்ப்தான் என்று முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பகீர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

மேலும் 2020 அதிபர் தேர்தலில் தான் மீண்டும் வெற்றி பெற உதவ வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங்கிடம் ட்ரம்ப் கெஞ்சியதாக பெரிய குண்டைத்தூக்கிப் போட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ‘The room where it happened a white house memoir ’ என்ற தலைப்பின் கீழ் எழுதிய புத்தகத்தில் அதிபர் ட்ரம்ப்பின் தகிடுத்தத்தங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “சீனாவி உய்குர் முஸ்லிம்களை தடுப்புக் காவலில் அடைத்து வைக்க சீன அரசு முகாம்களைக் கட்டியது, இது குறித்து ட்ரம்பிடம் ஜின்பிங் தெரிவித்த போது தடுப்புக் காவல் முகாம்கள் சரியானதே என்று கூறிய ட்ரம்ப் முகாம்களை கட்ட சீனாவுக்கு ஆதரவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டுக்கு இடையே அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார். அப்போது 2020 அதிபர் தேர்தலின் போது தான் மீண்டும் வெற்றி பெற உதவ வேண்டும் என்று ஜின்பிங்கிடம் கெஞ்சிக் கூத்தாடினார்..

ட்ரம்ப் கூறிய சரியான வார்த்தைகளை என்னால் குறிப்பிட முடியவில்லை, காரணம் அதைக் கூற தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட லாபங்களுக்காக வெளியுறவு கொள்கைகளை வளைப்பவர் ட்ரம்ப்” என்று பகீர் குற்றச்சாட்டுகளை அவர் வைத்தார்.

இந்தப் புத்தகத்தை தடை செய்யக்கோரி அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.