உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் – மஹிந்த தேசப்பிரிய

Mahinda 2 உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் - மஹிந்த தேசப்பிரியகுறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல்களை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது. ஜனாதிபதி தேர்தல் குறித்து உயர்நீதிமன்ற அறிவிப்பு பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க்கும் போதே இதனை மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தாா்.

“அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் வரையிலான காலப் பகுதியில் நடத்தப்பட வேண்டும். தேர்தலுக்கான பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள நிலையில் ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர்நீதிமன்றில் வியாக்கியானம் கோரப்பட்டுள்ளது. அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு அமைய ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்” என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினாா்.

“இதனை நாங்கள் எதிர்க்கவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் வாக்கெடுப்புக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நெருக்கடிகளை ஏற்படுத்துவது அரசியல் சூழ்ச்சி என்றே குறிப்பிட வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமற்ற காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு மாகாண சபை தேர்தலும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலும் பிற்போடப்பட்டுள்ளன. இவ்விரு தேர்தல்களையும் அரசாங்கம் மறந்து விட்டது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த தேர்தலையும் பிற்போடுவது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது” என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தாா்.

தொடா்ந்து கருத்து வெளியிட்ட மஹிந்த தேசப்பிரிய, “இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட விளைவுகளை ஆட்சியாளர்கள் நன்கு அறிவார்கள். நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்த்துள்ளார்கள். ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வெற்றி மற்றும் தோல்விக்காக தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. தேர்தலை பிற்போடுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள். தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தாா்.