இலங்கை-தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறி

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைதோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை

அரசாங்கம் தோட்ட மக்களின் அபிவிருத்தி கருதி வழங்கிய பல்வேறு வாக்குறுதிகளும் கேள்விக் குறியாகி வருகின்றது. இம்மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மோசமடைந்துள்ள நிலையில் அரசாங்கம் பாராமுகத்துடனேயே செயற்படுகின்றது.

தொழில் வழங்குநருக்குப் பின்னால் இருந்து அரசாங்கம் அவர்களுக்கு ஆதரவளிப்பதன் காரணமாக தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோகின்றன.

இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்து அரசாங்கத்துக்கு சரியான பாடம் புகட்டியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.சிவஞானம் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் சமகால போக்குகள் நாட்டு மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளன. அரசாங்கத்துக்கு  எதிரான எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில் கடன் சுமை நாட்டின் கழுத்தை நெருக்கி வருகின்றது. இதனிடையே அரசாங்கம் நாட்டு மக்களின் நலன்கருதி வழங்கிய வாக்குறுதிகள் கேள்விக் குறியாகி வருகின்றது. மலையக மக்கள் தொடர்பான வாக்குறுதிகளும் இதில் உள்ளடங்கும்.

சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பெருந்தோட்ட மக்கள் நிலை குலைந்து போயுள்ளனர். ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதிலும் அரசாங்கம் சறுக்கல் நிலையினை சந்தித்துள்ளது.

இப்படியான நிலையிலேயே  ஒரு நாடு. ஒரு சட்டம் என்று அரசாங்கம் பேசிக் கொண்டிருக்கின்றது. இதேவேளை காணியுரிமை மற்றும் வீட்டுரிமை இல்லாத சமூகமாக மலையக சமூகம் புறந்தள்ளப்பட்ட நிலையில் இருந்து வருகின்றது.தேசிய வேலைத் திட்டங்களில் பெருந்தோட்டங்கள் உள்வாங்கப்படாத நிலைமை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

தொழிற்சங்கங்களைக் காட்டிலும் தொழில் தருநர்கள் அரசியல் ரீதியாகவும் ஏனைய வழிகளிலும் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்குகின்றனர்.இதனால்தான் தொழிற் சங்க ரீதியான முன்னெடுப்புக்கள் இன்று சவாலைச் சந்தித்து வருகின்றன.

தொழில் தருநர்கள் தோட்டத் தொழிலாளர்களை தொழில் ரீதியாக கசக்கிப் பிழியவும் ஆட்டிப் படைக்கவும் முற்படுகின்றனர்.இதனால் பெருந்தோட்ட மக்களின் இருப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது.அரசாங்கம் தொழில் வழங்குநருக்குப் பின்னால் இருக்கின்ற ஒரு நிலைமையே இதற்கெல்லாம் காரணமாகும்” என்றார்.

Tamil News