மட்டக்களப்பு – முந்திரிகைச் செய்கை என்ற பெயரில் காணி அபகரிப்பு

133 Views

முந்திரிகைச் செய்கை என்ற பெயரில் காணி அபகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டிப்பளை எல்லைப்பகுதியில் சிங்களவர்களை குடியேற்றும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இங்கு முந்திரிகைச் செய்கை என்ற பெயரில் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறியப்படுகின்றது.

பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலைப் பகுதியை அண்மித்த வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியிலேயே இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாந்தாமலைப் பகுதியானது, தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றுக் கிராமமாகும். அத்தோடு தமிழர்களின் சிற்றரசர்கள் ஆட்சி செய்த பகுதியாகவும் கருதப்படுகின்றது.

இப்பகுதியே மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வனப்பகுதியாகவும் காணப்படும் நிலையில், இக்காடுகளை அழித்து, சிங்கள மக்களைக் குடியேற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் தமிழர்கள் காலம் காலமாக சேனைப் பயிர்செய்கை மற்றும் மாடு வளர்ப்பு போன்ற தொழில் முயற்சிகளை முன்னெடுத்துவந்த நிலையில், அப்பகுதியில் முந்திரிகைச் செய்கை என்ற காரணத்தினைக்கூறி சிங்கள ஊர்காவல் படையினருக்கு தலா மூன்று ஏக்கர் வீதம் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு அதிகாரிகளினால் கொண்டு செல்லப்பட்ட போதிலும், இதுவரையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் அதிகாரிகள் மட்டத்தில் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 2000 ஏக்கருக்கு அதிகமான காணிகளில் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதாகவும், எதிர்காலத்தில் இது தமிழர்களுக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad மட்டக்களப்பு - முந்திரிகைச் செய்கை என்ற பெயரில் காணி அபகரிப்பு

Leave a Reply