இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வாழ்வாதாரத்தை இழக்கும் தமிழ் மீனவர்கள்

285 Views

 

அண்மைய நாட்களாக யாழ். மாவட்டம் மற்றும்  முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாகவும் இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபட்டு,  தமிழ் மீனவர்கள் பலரதும் பல இலட்சக்கணக்கான மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இலங்கை கடற்படையும் மீனவர்களும் தம்மை தாக்குவதாக இந்திய மீனவர் தரப்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இன்றும் நாளையும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் “யுத்தத்திலே பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்கள் இன்றும் கூட தங்களுடைய தொழிலை சரியாக செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர் இந்திய  மீனவர்கள்” என வடக்கு கிழக்கு பிராந்தியங்களிற்கான இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன்  தெரிவித்துள்ளார்.

இலக்கு மின்னிதழிலிருந்து இலங்கை, இருநாட்டு மீனவர்களுடைய தற்போதைய நிலைமைகள் தொடர்பாக வினவிய  போது,

 “இந்திய மீனவர்களால் கடந்த 20 வருடமாக  தமிழ் மீனவர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கிறது. இந்திய மீனவர்கள் இழுவை மடியுடன் வந்து இலங்கை கடற்பரப்பிலே தொழில் செய்வது ஒரு முக்கிய முரண்பாடாக இருந்து வருகின்றது.

ஒரு சில நேரங்களிலே, இலங்கை மீனவர்களும் இந்திய கடற்பரப்பிற்குள்ளே சென்று மீன்பிடியிலே ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், முப்பது வருட கால யுத்தத்திலே பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்கள் வாழும் கடல் பகுதிக்குள் இந்திய இழுவை மடிகள் வந்து  மீன் பிடியில் ஈடுபடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தினுடைய வடமராட்சி, வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு பிரதேசங்களிலே இவர்கள் இழுவை மடிகளை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதனால், கடலில் இருக்கும் தாவரங்கள், மீன்குஞ்சுகள் இல்லாமல் போவதோடு, இலங்கை  மீனவர்களுடைய வலைகளும் அறுக்கப்படுகின்றது.

இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையேயான பிரச்சினை தொடர்பாக இந்திய  இலங்கை மீனவர்களுக்கிடையில் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போதும், எந்த தீர்வும் இதுவரையில் கிடைக்கவில்லை” என்றார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்

அதே நேரம், அதிமுக கட்சியின் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார் இலக்கு மின்னிதழுக்கு கருத்து தெரிவிக்கையில்,  “இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றுதான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் முயற்சியின் பயனாக முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்தப் பேச்சுவார்த்தை 3 முறை நடைபெற்றது. அதில் இறுதி தீர்வு எட்டப்பட இருந்த நிலையில், இலங்கை அரசு அது குறித்து எந்த முயற்சிகளையோ நடவடிக்கைகளையோ எடுக்கவில்லை.

எனவே நின்று போன பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பித்தால், இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் சுமுகமாகத் தீர வாய்ப்பிருக்கின்றது. அதற்கு இந்த இருநாட்டு அரசுகளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு மீனவர்கள் கடலில் மோதிக்கொள்ளக்கூடாது. மேலும் மீனவர்கள் தவறுதலாகவே கடல் எல்லைகளைத் தாண்டுகின்றனர்.

அவ்வாறு கடல் கடக்கும் மீனவர்களை கைது செய்து உடனடியாக இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க வேண்டும், அதை விடுத்து மீனவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். அதிமுக ஆட்சிக் காலத்தில் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் குறைந்திருந்தன” என்றார்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வாழ்வாதாரத்தை இழக்கும் தமிழ் மீனவர்கள்

Leave a Reply