இலக்கு மின்னிதழ் 152-ஆசிரியர் தலையங்கம்

157 Views

இலக்கு மின்னிதழ் 152-ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் இந்திய நலன் பேணுவதற்கு இலங்கைத் தமிழர்கள் நலனா பேரப்பொருள்?

இலங்கையில் இந்திய நலன் பேணுவதற்கு இலங்கைத் தமிழர்கள் நலனா பேரப்பொருள்? உள்ளகப் பொறிமுறையால் மனித உரிமைகளின் தரத்தை உயர்த்த முடியுமென ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையகத்திற்கு கூறி, அதற்கமைய ஆணையகத்துடன் நல்லிணக்கமாகச் செயற்படவும் தயார் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் ஒருநிலை.

அதே உள்ளகப் பொறிமுறையால் ஈழத் தமிழர்களின் மனித உரிமைகளை மட்டுமல்ல, மனித இருப்பையும் இல்லாதொழித்தல் என்பது நடைமுறையில் சிறிலங்காவின் மறுநிலை.

முற்றிலும் நேர் எதிரான போக்குகளை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான தேவையில் சிறிலங்கா அரசாங்கம் கண்டுபிடித்த பாதுகாப்புக் கவசம் தான் இந்திய உறவுப் புதுப்பித்தல் என்னும் பெயரில் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் விடயங்கள்.

இந்தியாவுக்கும் சீனாவுடன் சிறிலங்கா நெருங்கிய உறவில் உள்ள நிலையில், தனது நலனைச் சிறிலங்காவில் பேணுதல் எவ்வாறு என்பதே இன்றைய சமகாலப் பிரச்சினை.

சீனா இலங்கையின் வடக்கு கிழக்கு நோக்கிய முதலீட்டு நகர்வுகள் வழியாகத் தமிழர் தாயகப் பகுதியின் இந்துமா கடல் கடற்கரைப் பகுதிகளின் உட்கட்டுமானத்தில் நிலையெடுப்பு செய்கிறது. இதனை மாற்ற சிறிலங்காவில் தனது நலனை மீள்நிறுவுதல் என்பது இந்தியாவின் இன்றைய மூலோபாயமாக உள்ளது. இது குறித்து சிறிலங்காவுடன் நயமாக அணுக வேண்டிய தேவை இந்தியாவுக்குப் பலமாக ஏற்பட்டு வருகிறது.

காஸ்மீர் பிரச்சினை, ஆப்கானிஸ்தானில் தோன்றியுள்ள புதிய ஆட்சி மாற்றங்களின் பின்னணியில் ஈரானுடனும் இணைந்த முயற்சிகளுக்கு ஊடாகப் பாகிஸ்தானால் வேகப்படுத்தப்படும் என்னும் எதிர்பார்ப்புப் பலமாக உள்ள நிலையில், தென்னிந்தியக் கடற்கரையின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் தலைமை நலன்களில் ஒன்றாக மாறி வருகின்றது.

இந்தச் சூழலில் இலங்கையில் இந்திய நலனுக்காக ஈழத் தமிழர்களின் நலனைப் பேரப் பொருளாக வைத்து சிறிலங்கா இந்திய மீள உறவாடல் தொடங்கப்பெற்று வருகிறது.

1920 – 30 களில் நேரு மலையகத் தமிழர்களுக்கு அரசு நோக்கிய அரச நிலை என்னும் ‘டீபக்டோ’ நிலை உண்டு. ஆகவே அவர்கள் முழு அளவிலான அரச நிலைக்கு – ‘தேயூர்’ நிலைக்கு உரிமையுள்ளவர்கள் எனக் கூறிவிட்டுப் பின்னர் இலங்கையில் பல நிலைகளில் இந்திய நலனை முன்னெடுப்பதற்காக மலையக மக்களின் பிரச்சினை வந்த போது, மலையக மக்கள் சார்பாகச் செயற்படாமல் இலங்கை அரசு சார்பாகவே இந்தியா செயற்பட்டமை வரலாறு.

அவ்வாறே 1983இல் யூலை இன அழிப்பு இழப்புக்களை அடுத்து ஈழத் தமிழர்கள் தங்களுடைய உயிருக்காகவும், உடைமைகளுக்காகவும், நாளாந்த வாழ்வைப் பாதுகாப்பதற்காகவும் ஆயுத எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவசியமென அவர்களுக்கு இந்தியா ஆயுதங்களும், பயிற்சிகளும் அளித்து, ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தியமை வரலாறு. பின்னர் 1987இல் ராஜீவ் ஜெயவர்த்தன உடன்படிக்கை எனப்படும் இலங்கை இந்திய உடன்படிக்கையில் வெறுமனே சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட நிர்வாகப் பரவலாக்கலுள்ள மாகாணசபை அமைப்பு முறை ஒன்றை முன்மொழிந்து, வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த நிர்வாக அலகாக உள்ள அம்மாகாண சபையே இலங்கைத் தமிழர் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவால் விதந்துரைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் சிறிலங்காவின் அரசியலமைப்பில் 14.11.1987ஆம் திகதிய 13ஆவது திருத்தத்தால் அத்தியாயம் XVII நிதி என்பதன் ‘ஆ’ பிரிவாக மாகாணசபை தாபித்தல் என்பது சேர்க்கப்பட்டது. இதன் தலைப்பே இது ஒரு நிதிப்பரவலாக்கலுக்கான செயற்பாடு என்பதைத் தெளிவாக்கியது. அத்துடன் இது எட்டு மாகாணங்களுக்குமான நிர்வாகப் பரவலாக்கலே தவிர, வடக்கு கிழக்கு என்று எந்தத் தனித்துவப் பகுதியும் அரசியலமைப்பில் சேர்க்கப்படவில்லை.

ஜனாதிபதியின் ஆணையின் அடிப்படையில் தான் வடக்கு கிழக்கு ஒரு நிர்வாக அலகாக அறிவிக்கப்பட்டு ஒரு மாகாணசபை வடக்கு கிழக்குக்கு நிறுவப்படலாமென பிரகடனப்படுத்தப்பட்டு, இந்த இணைப்பு ஒரு வருட காலத்துள் வடக்கு கிழக்கில் நடைபெறும் குடியொப்பத்தின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. ஜனாதிபதி விரும்பினால் எந்த மாகாண சபைகளின் இணைப்பையும் கலைக்கலாம் என்பதன் அடிப்படையில், இந்த வடக்கு கிழக்கு ஒரு அலகு என்னும் நிர்வாக இணைப்பும் ராசபக்ச சகோதர ஆட்சியில் கலைக்கப்பட்டு, இன்று வடக்கு மாகாணசபை, கிழக்கு மாகாணசபை என்பனவே நடைமுறையில் உள்ளது. இவையும் முற்று முழுதாக சிறிலங்கா ஜனாதிபதியின் கருணையில் உயிர்வாழும் தன்மை கொண்டனவாக உள்ளன. இன்றைய சிறிலங்கா அரசு தயாரிக்கும் புதிய சிறிலங்கா அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்தால் சேர்க்கப்பட்ட அத்தியாயம், சிங்களப் பெரும்பான்மையினர் வெறுப்பை மீறி மீளவும் இடம்பெறுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் இன்று “தமிழர்களின் கண்ணியமான வாழ்வினை” ஏற்படுத்துங்கள் என யாழ்ப்பாணம் வரை சென்று முன்மொழிந்து வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் இந்த மாகாணசபையே தமிழர்களின் கண்ணியமான வாழ்வுக்கான வழியென்று முன்மொழியப்படுவது, இலங்கைத் தமிழர்களுக்கு இடையில் மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கு இடையிலும், சிறிலங்காவில் இந்திய நலனுக்காக மீளவும் ஈழத்தமிழர்களின் நலன் பேரப்பொருளாக்கப்பட்டு வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தக்கூடிய முறையில் இந்திய இராணுவம் சிறிலங்கா இராணுவத்திற்குப் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad இலக்கு மின்னிதழ் 152-ஆசிரியர் தலையங்கம்

Leave a Reply