கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

இலங்கையில் தமிழினத்தின் இருப்பு என்பது மிகத் தொன்மையானது. அது பழங்கால இதிகாசங்கள், இலக்கியங்கள் போன்ற அகச் சான்றுகளால் மட்டுமன்றி, கல்வெட்டுகள், காலவோடுகள், பண்பாட்டுச் சின்னங்கள், வழிபாட்டு சின்னங்கள் என புறச்சான்றுகளாலும் ஐயம் திரிபுக்கு இடமின்றி மெய்ப்பட்டு நிற்கிறது. வடக்கின் ஆனைக்கோட்டை முதல் கிழக்கின் சங்கமன்கண்டி வரை பரந்தளவில் இவற்றை காணமுடியும். இவற்றுக்கு அப்பால் தென்பகுதியிலும் பெருந்தொகையான தொல்பொருட்கள் காணப்படுகின்றன.

இருந்த போதிலும் அண்மையில் கிழக்கிலங்கையில் வெளிப்பட்டு நிற்கும் தமிழினத்தின் கி.மு காலத்து பூர்வீக அடையாளங்கள் மிக வலிமையானவையும் தனிச்சிறப்பு மிக்கவையுமாகும். இந்த வெளிப்பாடு, இதற்கு முந்தைய இலங்கையின் தமிழ் குடியினரின் வரலாறு பற்றிய மேலோட்டமான கண்ணோட்டத்தை கேள்விக்குள்ளாக்கி நிற்கிறது.

அண்மைக்காலத்தில் இப்பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் பலனாக, தமிழர்களின் மொழி, வாழ்வியல் பற்றிய அற்புதமான பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இவற்றை நோக்கும் போது, தமிழ்நாட்டின் கீழடிக்கு நிகரான, சிலவற்றில் அதனையும் விஞ்சுமளவிற்கு தமிழ் பிராமி சாசனங்களும் ஏனைய தொல்பொருட்களும் இங்கு நிறைந்து கிடக்கின்றன.இங்கு குறிப்பிடப்படுவது நிலமட்டத்திற்கு மேலுள்ளவை பற்றி மட்டுமே.அகழப்போனால் இன்னும் அநேகம் கிடைக்கும். ஆனால் இருப்பவைகளே அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் ஏன் காணாமல் போகச்செய்யப்பட்டும் வரும் வேளையில் தமிழர் அடையாளங்களை அகழ்ந்தெடுக்க யாரும் அனுமதிக்கப் போவதில்லை.zz 1 கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

இவ்வாறான ஒரு நிலையில், இலங்கையில் தமிழரின் பண்டைய வரலாற்றை அறிவுபூர்வமாக ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் பணியில் உழைக்கின்ற உணர்வாளர்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்களே. குறிப்பாக பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களும், அவரது குழுவினரும் மேற்கொண்ட பணிகள் மிக்க காத்திரமானவை,பாராட்டுக்குரியவை.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்புக் குறித்த அவரது நூலான ‘இலங்கைத் தமிழர் வரலாறு ; கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் (கிமு 250 – கிபி 300)’ என்ற வரலாற்று ஆய்வுநூல் இலங்கை தமிழர் வரலாற்று ஆய்வில் மிகமுக்கிய மைல்கல். இந்த நூலுக்கு அப்பாலும் அங்கு ஆய்வு செய்யப்படவேண்டிய விடயங்கள் அநேகமுள்ளன.

தமிழ் நாட்டில் தமிழரின் தொன்மைக்கு சான்றாக ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொடுமணல் போன்ற இடங்கள் விளங்குகின்றன. அண்மையில் மதுரை கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பல தடைகளையும் தண்டி தமிழ் மொழியின் தொன்மையையும் தமிழினத்தின் மேம்பட்ட வாழ்வியலையும் உலகுக்கு எடுத்துக்காட்டின. அங்கு பானையோடுகளில் எழுதப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கிடைக்கப்பெற்றன. அவை கிமு 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என கண்டறியப்பட்டன. இந்த கண்டறிவே கீழடியின் சிறப்புக்கு பிரதான காரணம் ஆகியது.

மட்டக்களப்பின் வெல்லாவெளியில் காணப்படும் கருங்கற்பாறையில் தமிழ் பிராமி வாசகம் செதுக்கப்பட்டுள்ளது. இதுவே இலங்கையில் கிடைத்த மிகப்பழமையான தமிழ் பிராமி வடிவம் எனப்படுகிறது. கீழடியில் கிடைத்த தமிழ் குறித்த இரு பிராமி வடிவங்கள் இரு சொற்களை (ஆதன், குவிதன்) அடையாளப்படுத்தி நிற்கவெல்லாவெளிக் கல்வெட்டு ஒரு பொருள்தரும் வசனத்தை தந்துநிற்கிறது.

குறித்த கல்வெட்டை தமிழகத்தையும் இலங்கையையும் சேர்ந்த கல்வெட்டாய்வுக் குழுவினர் முறையாக ஆய்வு செய்தனர். பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் வே.மகேஸ்வரன் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் மூத்த கல்வெட்டாய்வாளர் முனைவர் வே.வேதாசலம் மற்றும் அவரின் குழுவினர் ஆய்வுசெய்தனர்.

இதன்போது, தமிழகத்தின் முதுநிலை ஆய்வாளர்கள் அந்த வசனத்தை கீழ்வருமாறு பொருள்படுத்தினர். “பெருமகன் சமுதாயத்தின் சம்மதத்தோடு கொடுத்த குகை”. இந்த வாக்கியம் சிறிதானாலும் அதில் நிறைந்தபொருள் கொள்ளமுடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.01 கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

குறித்த எழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, அக் கல்வெட்டு இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் அறியப்படுகிறது. இந்த கல்வெட்டு வாசகம், ஒரு தலைவனின் கீழ் தமிழ் எழுத்தறிவுள்ள தமிழ் மொழிபேசும் இனமொன்று இப்பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததை உறுதிசெய்கிறது.

மேலும் வெல்லாவெளிப்பகுதியில் காணப்படும் மலைகளில் வெட்டப்பட்ட படிக்கற்கள் ,கற்றூண்கள், ஈமத்தாழிகளின் சிதைவுகள் நாகர்களின் பெயர் பொறிக்கப்பட்ட சின்னங்கள், வழிபாட்டுச் சின்னங்கள் என்பன அங்கு ஒரு மேம்பட்ட சமூக அமைப்பாக தமிழ்மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை காட்டிநிற்கின்றன.

கீழடி அகழ்வில் உறைகிணறுகள் காணப்படுகினறன. இங்கும் சுடுமண் வளையங்களைக் கொண்டு அமைக்கப்பட்டு வேலைப்பாடுகளுடன் கூடிய மேலமைப்புடன் கிணறுகள் காணப்படுகின்றன. இவற்றில் தமிழ் பிராமி வடிவங்கள் காணப்படுவது மேலும் சிறப்பானதாகும்.

மட்டக்களப்பு இலாவணை பகுதியிலும், மாவடிவேம்பிலும் இவ்வகையான கிணறுகள் காணப்படுகின்றன. இலாவணை கிணற்றில் ‘வேள்ணாகன் மகன் வேள் கண்ணன்’ என தமிழ் பிராமியில் எழுதப்பட்டுள்ளது. இது தவிர வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் செதுக்கப்பட்ட நீள்சதுர கற்களாலான நாகர் காலக் கிணறும் இங்கு குறிப்பிடத்தக்கது.02 கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பதுமிகவும் அரிதாகக் கருதப்படும் நிலையில், கீழடியில் பெருமளவான செங்கல் கட்டிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்துடன் சுட்டமண்ணால் செய்யப்பட்ட நீர்வடிகால் தொகுதிகளும் காணப்படுவது சிறப்பு.

 

இங்கும் கட்டிடப் பயன்பாட்டில் செங்கற்கள் இருந்துள்ளமைக்கான உறுதியான சான்றுகள் உள்ளன. படிவெட்டினமலைப் பகுதி உள்ளிட்ட பலவிடங்களில் செங்கற் கட்டிடச் சிதைவுகள் காணப்படுகிறன. அதுமட்டுமன்றி கருங்கல்லில் பொழியப்பட்ட வடிகால் பகுதிகளும் இங்கு காணப்படுகின்றன. இவற்றிற்கு மேலாக கூரை ஓடுகளும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

கீழடியில் பெருமளவான மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு பாலாமடுவில் தமிழ் பிராமியில் பெயர் பொறித்த மட்பாண்டங்களும் சுடுமண் படிமங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவற்றுக்கு அப்பால், பூர்வீக தமிழர்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்திய பல்வேறுபட்ட பொருட்களும் இப்பகுதிகளில் பெருமளவு காணப்படுகின்றன. கருங்கல்லினால் செய்யப்பட்ட உரல்கள், அம்மி-குளவிகள் என இவை அமைகின்றன.மட்டக்களப்பில் களுவாஞ்சிகுடியில் ஒரு பெரிய கருங்கல் செக்கு காணப்படுகிறது. இதில் நாகர்களின் பெயர்கள் தமிழ் பிராமிவடிவில் எழுதப்பட்டுள்ளன. இந்த செக்கின் கொள்ளளவு கிட்டத்தட்ட 40 கிலோ இருக்கும் எனக் கூறப்படுகிறது. இவற்றினைக்கொண்டு அம்மக்களின் உணவு முறைகளை மட்டுமன்றி விவசாய மேம்பாட்டையும் நாம் ஊகிக்க முடியும்.03 கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

இப்பகுதிகளில் காணப்படும் கற்றூண்கள், மலைப்படிகள், கருங்கற் சிற்பங்கள் போன்றவை அம்மக்களின் கலைத்திறனை வெளிப்படுத்துவதோடு மட்டுமன்றி, அவர்களின் உலோக பொருள் உற்பத்தியையும் எடுத்துக் காட்டுவனவாகவும் உள்ளன.

தமிழர் என்றால் ‘வீரம்’ என்றன சொல்லே எமக்கு உடனடியாக நினைவுக்கு வரும். இந்தவகையில் இங்கு வாழ்ந்த மக்கள் தமக்கான தனித்துவமான போரியல் பண்புகளையும் கொண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகள் இங்கு கிடைத்துள்ளமை, தமிழினம் பெருமைகொள்ளக்கூடிய ஒரு விடயமே.

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் காணப்படும் போர்வீரனின் உருவம் பொறித்த செங்கல், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். போர்வீரன் ஒருவன் வில்லை கையிலேந்தியிருப்பதாக, அந்த உருவம் அமைந்துள்ளது. இது போர்வீரன் ஒருவனின் உருவம் என்பதை தமிழக முதுநிலை தொல்லியலாளர் சு.இராசகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை தமிழ் நாட்டில்கூட இத்தகைய பழமைவாய்ந்த தமிழர் போர் மரபுசார்ந்த அடையாளம் கண்டறியப்பட வில்லை. இந்த உருவத்தில் ‘மணிநாகன்’ என தமிழ் பிராமி வடிவில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவிர, இப்பகுதியில் காணப்படும் குதிரை வடிவ சிற்பங்கள், மற்றும் அடையாளங்கள், இங்கு வாழ்ந்த மக்கள் குதிரைகளை பயன்படுத்தியமையை கோடிட்டுக் காட்டுவதாக அமைகிறது. வெல்லாவெளி பகுதியில் உள்ள களுமுந்தன்வெளியிலும் இலாவனையிலுமுள்ள குதிரைவடிவங்களை இங்கு உதாரணமாகக் கூறமுடியும். யானைகளையும் இந்த மக்கள் தமது பயன்பாட்டில் வைத்திருந்தனர் என்பதை காரைதீவில் உள்ள நீர் வார்க்கும் யானைகளின் உருவம் எடுத்துக் காட்டுகிறது.06 கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

தமிழ்நாட்டின் கீழடிக்கும் கிழக்கிலங்கையின் பூர்வீக தமிழ் குடிகளின் வாழ்விடங்களுக்கும் நாம் பல ஒத்தியல்புகளை காண்கின்றபோதும், இங்கு சில வேறுபாடுகளும் காணப்படுவது வெளிப்படை.

கீழடியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அங்கு வழிப்பாட்டு மரபொன்று இருந்ததாக அறியமுடியவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். கிழக்கிலங்கையில் பூர்வீக தமிழர்கள் வழிப்பாட்டுடனான வாழ்க்கைமுறையொன்றை கொண்டிருந்தனர் என்பது மிகவும் வெளிப்படையாக தெரிகிறது.

திருகோணமலையின் திருக்கரசை பகுதியிலும், மட்டக்களப்பின் வந்தாறுமூலைப் பகுதியிலும் காணப்படும் வழிபாட்டு சின்னங்களை இதற்கு எடுத்துக்காட்டுக்காகக் கூறமுடியும். இவற்றில் ‘மணிநாகன்’ எனப்பெயர் தமிழ் பிராமியில் பொறிக்கப்பட்டுள்ளமை வெளிப்படை.

இவ்வாறு முன்பு என்றுமில்லாதவாறு இலங்கைத்தீவில் தமிழர்களின் தனித்துவமான மொழி, பண்பாட்டு விடயங்கள் இன்று வெளிப்பட்டு நிற்கின்றன. ஆனால் இவைதொடர்பாக தமிழினம் எந்தளவு அக்கறை கொண்டுள்ளது என்பது தெரியவில்லை. ஏற்கனவே எமது வரலாற்று ஆதாரங்கள் பல அழிக்கப்பட்டுவிட்டன. வேறு பல மறைக்கப்பட்டுள்ளன. ஏன் காணாமல் ஆக்கப்படவும் செய்கின்றன. இன்னும் பல ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டன.08 கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

“கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடு செய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்படும்” என்ற சிறிலங்கா அரசின் அறிவிப்பொன்றும் சாதாரணமானதல்ல.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பையடுத்து, எமது அரசியல்வாதிகள் வழமைபோல் அறிக்கைகள் விடுகின்றனர். இவற்றுக்கு அப்பால் அவர்கள் எதுவும் செய்வதில்லை. ‘பௌத்த மயமாக்கல் முயற்சி’ என்கின்றனர் சிலர். ‘நிலஆக்கிரமிப்பு’ என்கின்றனர் வேறுசிலர்.
ஆனால் இது அதைவிட மிகவும் ஆழமான நோக்கங்களை கொண்டதாகவே ஊகிக்க முடிகிறது. கிழக்கில் கிட்டத்த்தட்ட 375 இடங்கள் பௌத்த சமயத்துடன் தொடர்புடைய இடங்களாக சிறிலங்கா அரசால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக கிழக்கு ஏன் குறிவைக்கப்பட்டுள்ளது, என்பதை நாம் இப்போது ஓரளவுக்கேனும் புரிந்துகொள்ளமுடியும்.

கிழக்கில் உள்ள தமிழரின் வரலாற்று சான்றுகள், கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமோ அல்லது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமோ உரித்தானவையல்ல. அவை ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தின் உயரிய முதுசங்கள்.

தமிழரின் தாயகப்பகுதிகளில் உள்ள இதுபோன்ற பூர்வீக வரலாற்றிடங்களை, தொல்லியல் சான்றுகளை அழிவுகளிலிருந்து, ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாத்து அவற்றை நிலைநிறுத்த தமிழர்களாகிய நாம் எம்மாலான முயற்சிகளை ஒன்றிணைந்து மேற்கொள்ளவேண்டிய வேளையிது.

 

பின்னிணைப்பு –

 

09 கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

07 கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

05 கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

04 கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

வெல்லாவெளி தமிழ் பிராமி கல்வெட்டை ஆய்வுசெய்த தமிழ்நாட்டு,இலங்கை தொல்லியல் ஆய்வாளர் குழு –Untitled 2 கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

இதில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் மூத்த கல்வெட்டாய்வாளர் முனைவர் வே.வேதாசலம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல்லியல் துறைப் பேராசிரியர் கு.சேதுராமன், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை ஆய்வாளர் முனைவர் சு.இராஜகோபாலன், தஞ்சைப் பல்கலைக்கழக நீரகழ்வாய்வு மையப் பேராசிரியர் ந.இராஜவேலு, மதுரை தமிழ்நாடு தொல்லியல்துறை அலுவலர் முனைவர் சொ.சாந்தலிங்கம் ஆகியோருடன் பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் வே.மகேஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.